காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்

காரைக்கால்: காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால் மாவட்டத்தில் சாலை போடுதல், கட்டிடம் கட்டுதல், நகர பகுதியில் குடிநீர் வழங்குதல், கிராம பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணிகளை பராமரித்தல், நீர்ப்பாசன பிரிவு பணிகள் உள்ளிட்ட மக்களுக்கான முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து வரும் பொதுப்பணித்துறையில் 50 சதவீதத்திற்கும் மேல் பல்வேறு பதவிகள் காலியாக உள்ளன. அதனால், பொறியாளர்கள் அனைவருக்கும் கூடுதலாக பணிகள் வழங்கப்பட்டு, பணி செய்து வருகின்றனர். இதனால், தற்பொழுது பணிபுரிந்து வரும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் தற்பொழுது 2 கண்காணிப்பு பொறியாளர், 15 நிர்வாக பொறியாளர், 30 உதவி பொறியாளர், 100 இளநிலை பொறியாளர், 150 ஓவர்சிர், 120 ஒர்க் இன்ஸ்பெக்டர், 50 மெக்கானிக் மற்றும் 700 எம்டிஎஸ் பதவிகள் காலியாக உள்ளன. ஏராளமான பதவிகள் காலியாக உள்ளதால் பொதுப்பணித்துறையில் தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுக்கு பொறியாளர்களும், உதவியாளர்களும், கீழ்நிலை ஊழியர்களும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. இதனால், பணிகளில் தேக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு தவறுகளும், பணிகள் தரமற்றதாக அமையவும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், பொறியாளர்கள், உதவியாளரகள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் பதவிகள் அதிகளவில் காலியாக உள்ளதால், மக்களுக்கான பணிகள் தேக்கம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அரசின் பார்வைக்கு சம்மேளனம் சார்பாக பல்வேறு வழிகளில் எடுத்துச் சென்றும், இதுவரை பதவிகளை பூர்த்தி செய்வதற்கு உண்டான எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முறையாக பதவி உயர்வும் வழங்கப்படுவதில்லை. ஆகவே, புதுச்சேரி அரசும், பொதுப்பணித்துறை நிர்வாகமும் இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக காலியாக உள்ள அனைத்து பொறியாளர், உதவியாளர் மற்றும் கீழ்நிலை ஊழியர்களின் பணியிடங்களை நிரப்பவும், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு முறை நிகழ்வாக பதிவு உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: