×

100 ஆண்டுகளுக்கு பின் திட்டக்குடி வெள்ளாற்றில் மாசி மக திருவிழா

திட்டக்குடி, மார்ச் 8:  திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாசி மகத்தை திட்டக்குடி வெள்ளத்தில் நடத்த வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் மாசி மகம் திட்டக்குடியில் நடைபெற ஏற்பாடு செய்தார். இதனையடுத்து 100 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் திட்டக்குடி வெள்ளத்தில் மாசி மக திருவிழா நடைபெற்றது. இதில் கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வைத்தியநாத சுவாமி முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தார். பின்னர் திட்டக்குடி சுற்றியுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளாட்டில் குவிந்தனர். பின்னர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேப்பூர்: வேப்பூர்  அடுத்த நல்லூர் மணிமுத்தாறு மற்றும் கோமுகி ஆற்றுக்கு நடுவே உள்ள வில்வனேஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம்  திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் மாசி மகத்தை முன்னிட்டு மணிமுத்தாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதையடுத்து விநாயகர்,  முருகர், பிரஹகந்தநாயகி, வில்வனேஸ்வரர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் தனித்தனி வாகனத்தில் வீதியுலா வந்து பின்னர் மணிமுக்தாற்றில்  தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். அங்கு  கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயிலில் மாசி மக திருவிழா கொடி இறக்கப்பட்டு உற்சவ சுவாமிகள் கோயிலுக்குள் எடுத்து செல்லபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags : Masi Maha festival ,Phetakkudi Vellaar ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை