நெல்லை: நெல்லை புத்தக திருவிழாவை சுமார் 6 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். மேலும் நேற்று மட்டும் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடந்தது. பாளை வஉசி விளையாட்டு மைதானத்தில் பொருநை நெல்லை 6வது புத்தக திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. 11 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது. நேற்று மாலை நடந்த நிறைவு விழாவிற்கு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது: நெல்லையில் நடந்த புத்தக திருவிழா ஊர் கூடி ஒன்றாக தேர் இழுத்தது போன்று நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.
இதற்கு உதவிய அரசு அதிகாரிகள், பொதுமக்கள், எழுத்தாளர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர், அரங்குகளை அமைத்தவர்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்தவர்கள் அனைவரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நெல்லையில் புத்தக திருவிழாவிற்கு தமிழக அரசு பல்வேறு உதவிகள் அளித்துள்ளது. இதற்கான நிதியை ஒதுக்கியத்தோடு மட்டுமல்லாமல் சிறப்பு நிதியையும் வழங்கியது. அடுத்தாண்டில் சென்னையில் புத்தக திருவிழா நடந்து முடிந்தவுடன் நெல்லையில் புத்தக திருவிழா ஜனவரி மாதம் நடத்த வேண்டும். புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்று திறனாளிகளுக்கு தனி அரங்குகள், திருநங்கைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புத்தக திருவிழாவில் ஜாதி, மதம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் பலரும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர். மாணவ, மாணவிகள் வாசிப்பை ஒரு கலையாக நினைத்து அதனை செய்திட வேண்டும். மாணவ, மாணவிகள் புத்தகங்களை அதிகளவில் படித்தால் அவர்களால் தங்களது லட்சிய கனவை எட்ட முடியும். புத்தக திருவிழாவில் இதுவரை சுமார் 6 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை நடத்தியதை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து மாணவ, மாணவிகள், ஆசியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலருக்கு கலெக்டர் கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையம் சுகன்யா ராஜ்குமார், பபாசி செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அனிதா வரவேற்றார். இதனையடுத்து சிறுகதை இலக்கிய எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டியன் பேசுகையில், ‘முதலில் பொழுது போக்கிற்காக அதிகளவிலான பக்கங்களை அடங்கிய கதைகள் நூல்களாக வர துவங்கியது. இது நாளடைவில் குறுகி குறைந்தளவிலான பக்கங்கள் கொண்ட கதைகள் வர துவங்கியது.
நமது நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட போது சிறியளவிலான பக்கங்களை கொண்ட சிறு கதைகள் வந்தது. இதில் சிறுகதை என்பது நறுக்கென்றும் ரத்தின சுருக்கமாகவும் இருக்கும். இதுவும் பின்னொரு நாளில் மேலும் சுருங்கி 5 பக்கங்கள், அதுவும் சுருங்கி 2 பக்கங்கள், ஒரு பக்கம், அரை பக்கம், கால் பக்கமாக வர துவங்கியது என்றார். இதனையடுத்து பொருநை பெருவனம் என்ற தலைப்பில் விருதாளர் சூர்யா சேவியர் பேசியதாவது: ‘நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அழகு சேர்ப்பது தாமிரபரணியான பொருநை நதியாகும். தலையணை பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்கள் ஏறி செல்ல முடியாத வன பகுதிகளில் பண்டைய காலத்தில் பாண்டிய மன்னன் 300க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டும் முரசுகளை அமைத்திருந்தார்.
கேரளாவிலிருந்து இவ்வழியாக அரசர்கள் படையெடுத்தால் உஷராகும் வண்ணம் இந்த கொட்டும் முரசுகளை அங்குள்ள வீரர்கள் ஓசை எழுப்புவர். தாமிரபரணி ஆற்றின் போக்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் மாறக்கூடும். நெல்லை, தூத்துக்குடியிலுள்ள பெயர்களை போன்று இலங்கையிலும் ஊர் பெயர்கள் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் திருநெல்வேலி என்ற ஊரில் அமைந்துள்ளது. அங்கும் பொருநை ஆறு ஓடுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆழி பேரலையால் நமது நாட்டிலிருந்து இலங்கை துண்டாக பிரிந்து சென்றது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பறையாட்டம் நடந்தது. இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதியும் பங்கேற்று பொதுமக்களின் கரவொலியை தட்டி சென்றார். நிறைவு விழாவில் பயிற்சி கலெக்டர் கோகுல், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்.எல்.ஏ., தாசில்தார் செல்வம், சதக்கத்துல்லா கல்லூரி பேராசிரியர் சவுந்தரமகாதேவன், எழுத்தாளர் நாறும்பூநாதன், ஆசிரியர் கணபதிசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
