திருமங்கலம்: திருமங்கலம் அருகே நான்குவழிச்சாலையில் ஆட்டோ மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மதுரை எஸ்எஸ் காலனி பாரதி மூன்றாவது தெருவை சேர்ந்தர் தங்கபாண்டி (36). ஆட்டோ வைத்துள்ளார். இவரது தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது பாட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து துக்கம் விசாரிப்பதற்காக தங்கபாண்டி, அவரது மனைவி வடிவுக்கரசி(33), அதே தெருவை சேர்ந்த பெருமாள் மனைவி மகமாயி(63), மாரியப்பன் மனைவி கனிமொழி((38) ஆகியோருடன் தனது ஆட்டோவில் தோப்பூருக்கு நேற்று முன்தினம் மதியம் சென்றுள்ளார். மதுரை திருமங்கலம் நான்குவழிச்சாலையில் வேகமாக வந்த தங்கபாண்டி தோப்பூரினை கடந்து கூத்தியார்குண்டு அருகே வந்த போதுதான் தோப்பூரினை தாண்டி வந்தது தெரியவந்தது. இதனால் நான்குவழிச்சாலையில் பிரேக் அடித்து தங்கபாண்டி ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அதே நேரத்தில் பின்னால் திண்டுக்கல்லிருந்து விருதுநகர் மாவட்டம் ஆர்ஆர்.
நகர் நோக்கி சென்ற மினி லாரி முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கிய மகமாயி, கனிமொழி, வடிவுக்கரசி மற்றும் டிரைவர் தங்கபாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவைத்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மகமாயி மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் உயிரிழந்தனர். கனிமொழி மற்றும் ஆட்டோ டிரைவர் தங்கபாண்டி ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தினை ஏற்படுத்திய மினிலாரி டிரைவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தினை சேர்ந்த கோபாலகிருஷ்ணனிடம்(23) விசாரணை நடத்திவருகின்றனர்.
