கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை நகருக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கிராமங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த ஒன்றியத்தில் ஏறத்தாழ 75 ஆயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில் எந்த ஒரு இளங்கலை கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, செவிலியர் பயிற்சி நிறுவனமோ, தொழில் பயிற்சி கூடமோ இல்லாததால் தஞ்சை நகரை நோக்கி செல்லும் சூழ்நிலை உள்ளது. தினசரி வேலைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சைக்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனவே காலை வேளையில் பேருந்து இல்லாமல் மக்கள் கடும் சிரமப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து காலை 8.30 மணி முதல் 10 மணி வரை குறைவாக எண்ணிக்கையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கந்தர்வகோட்டை மார்க்கமாக தஞ்சைக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். மேலும் கந்தர்வகோட்டை பணிமனையில் இருந்து தஞ்சைக்கு 8.30 மணி முதல் 9.30 மணிவரை மக்களுக்கு பயன்தரும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
