தா.பழூர்: மறந்த திதியை மகத்தில் கொடுப்பது ஐதீகம். இதில் மாசி மாதம் வரும் மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மகத்தை முன்னிட்டு மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் இடமாக அணைக்கரை உள்ளது. அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள அணைக்கரை வடவார் தலைப்பு இது அரியலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. மேலும் இந்த பகுதி பாசன மதகின் கடைமடை பகுதியாக விளங்குகிறது. ஆகையால் இந்த பகுதியில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் சந்திக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்த மாசி மகத்தை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காலை முதல் அணைக்கரை கொள்ளிடம் பகுதிக்கு வந்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள் என கூட்டம் அதிகரிக்கும் நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. இதில் முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி, எள், கீரை வகைகள், காய்கறிகள், வாழைப்பழம் உட்பட அனைத்தையும் வைத்து முன்னோர்கள் பெயரை கூறி வழிபாடு செய்தனர். இதில் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்கள் நீராடி விட்டு உடைகளை மாற்ற வழி இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பகுதியில் 3 மாவட்ட மக்கள் கூடும் இடமாக இருப்பதாலும் காலம் காலமாக தொடர்ந்து இங்கு வழிபாடு நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் ஆடி பெருக்கு உட்பட பல்வேறு விஷேச தினங்களுக்கு பொதுமக்கள் இங்கு கூடுகின்றனர். இந்த சாலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என பலரும் பயணிப்பதாலும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இங்கு கழிப்பறை வசதி மற்றும் உடைகளை மாற்ற ஆண், பெண் என தனி அறைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
