×

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்

புதுக்கோட்டை: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படியை அறிவித்து நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் தொகுப்பூதியத்திலும், சிறப்பு காலமுறை ஊதியத்திலும் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்யும் முறையை உடனடியாக தடைசெய்ய வேண்டும். ஆசிரியர்களை தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜபருல்லா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், உயர்மட்டக்குழு உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம் வரவேற்றார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு