ஊட்டி: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகளை ஒட்டியுள்ள நிலங்களில் வேலி அமைக்கப்பட்டுள்ளதால் காட்டு மாடுகள் நீர் அருந்த செல்ல முடியாமல் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிய கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக உள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. தற்போதைய சூழலில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றார் போல் வனப்பரப்பு இல்லாததால் மனிதன் - வனவிலங்குகள் மோதல் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது.
நீலகிரி வன கோட்டத்தை பொறுத்த வரை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அளவிற்கு உள்ளது. சாதாரணமாக தேயிலை தோட்டங்களில் இவை கூட்டம் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதை காண முடியும். தற்போதைய சூழலில் காட்டுமாடுகள் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் உலா வருவதையும் காண முடியும். வனப்பகுதிகளில் அந்நிய கலைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு உள்ளதால், தாவர உண்ணிகளின் மேய்ச்சல் நிலங்களும் பாதித்துள்ளது. இதனால் உணவு தேடி அலைய வேண்டிய நிலைக்கு காட்டுமாடுகள் தள்ளப்பட்டுள்ளன.
வனத்தை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்கள், விவசாய நிலங்கள் சமீபகாலமாக கட்டிடங்களாக மாறியுள்ளதுடன், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீர் நிலைகளுக்கு செல்வதிலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வதிலும் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை காட்டுமாடுகள் சந்தித்து வருகின்றன. ஊட்டி அருகே காட்டேரி அணை, கேத்தி பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுமாடுகள் வழக்கமாக நீர் அருந்தும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நிலங்களில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் கூட்டம் கூட்டமாக நீர் அருந்த வர கூடிய காட்டுமாடுகள் நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல் சுற்றி திரியக்கூடிய அவல நிலை நீடிக்கிறது. சில இடங்களில் அவற்றின் வழித்தடமும் மறைக்கப்பட்டுள்ளது. எனவே வனத்துறை இவ்விவகாரத்தில் தலையிட்டு நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் போன்ற இடர்பாடுகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
