×

அனைத்து தாலுகாவிலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நிரந்தர சேமிப்பு கிடங்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கை அனைத்து தாலுகாவிலும் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களிலும் பருவம் தவறி பெய்யும் மழைக்காலங்களிலும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.

வெயில் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைப்பதால் ஏற்படும் எடை குறைவால், நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கும், அரசுக்கும் இழப்பு ஏற்படுவதோடு, கொள்முதல் பணியில் ஈடுபடும் பட்டியல் எழுத்தாளர்களுக்கு ரொக்கவரி செலுத்தும் நிலையும் ஏற்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்க தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்புக் கிடங்கை அமைக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்