×

இயற்கை விவசாயிகளுக்கு கட்டணமின்றி பதிவு சான்று: விதைச்சான்று உதவி இயக்குநர் தகவல்

ராமநாதபுரம், மார்ச் 5: ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி கூறியுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் இயற்கை வேளாண் செய்யும் விவசாயிகள் குழுவாக அமைத்து எவ்வித கட்டணம் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம். இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டு அளவில் மட்டும் விற்பனை செய்யலாம். குறைந்தபட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவசாயிகள் வரை இணைந்து குழுவாக அமைத்து அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யும் விவசாயிகள் உறுதிமொழி படிவம், பண்ணை விபரங்கள், ஆதார் நகல், சிட்டா ஆகியவற்றை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். குழு உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். உற்பத்தி செய்யப்படும் விளைபொருள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என உறுதி செய்ய உபயோகிப்பாளர் ஒருவரை ஆய்விற்கு அமைத்து கொள்ளலாம். ஆய்வு முடிவுகள் குழுவில் ஒப்புதலுக்கு வைக்கப்படும். உள்ளூர் குழுவின் முடிவு திருப்திகரமாக இருந்தால் சான்று வழங்கப்படும்.

குழுவில் யாரேனும் ஒரு விவசாயி அனுமதிக்கப்படாத இடுபொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து நீக்கப்படுவார். இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் அங்ககச் சான்று பெற முடியும். விவசாயிகள் உள்ளூரை சேர்ந்த நபர் என்பதால் இயற்கையில் விளைந்த பொருள் என்ற நம்பகத்தன்மை வாங்குபவர்களுக்கு ஏற்படும். நுகர்வோர்கள் இடைதரகர் இன்றி பண்ணையிலேயே பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஊரில் இயற்கை வேளாண் செய்யும் விவசாயிகள் குழுவாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன்பெறலாம் என நினைக்கிறேன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை