மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழா: ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழா  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு  அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த விழாவையொட்டி, நேற்று விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசையுடன்  ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், பங்காரு அடிகளாரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் செவ்வாடை பக்தர்கள்  அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சித்தர் பீடம் அழைத்து வந்தனர்.  

இதனை தொடர்ந்து, சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள்  பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்து வரவேற்றனர். பங்காரு அடிகளார் சித்தர் பீடத்தை வளம் வந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு ஆராதனை செய்து பூஜை செய்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அரங்கில்  ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், முன்னாள் ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த், இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் தேவி ரமேஷ், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், சேலம் தொழிலதிபர் ஜெய்கணேஷ்,  இயக்க தலைமை செயல் அதிகாரி  அ.ஆ.அகத்தியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம்  மற்றும் நாமக்கல் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகளும் மற்றும் பக்தர்களும் செய்திருந்தனர்.

Related Stories: