×

வெம்பக்கோட்டை அருகே அலமேலுமங்கைபுரத்தில் தனிச்சிறப்புடன் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 4: சாத்தூர் அருகே அலமேலுமங்கைபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சிலம்பம், யோகா உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் சுகாதாரம் குறித்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதுடன், வகுப்பில் நாளிதழ் வாசிக்கும் பழக்கமும் உள்ளது. சாத்தூர், வெம்பகோட்டை மற்றும் அவற்றின் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வருமானம் அடிப்படையில் அவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் தங்கள் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மேலும் தனியார் பள்ளிகள் சிறிது தொலைவில் இருப்பதால் தொடக்கப்பள்ளி மாணவர்களை வாகனங்களில் கொண்டு சென்று பள்ளில் சேர்க்க வேண்டியதாக உள்ளது. பட்டாசு ஆலை தொழிலாளர்களிடம் வாகனங்கள் இருப்பினும், அவர்கள் அதிகாலை நேரத்தில் வேலைக்கு புறப்பட்டு செல்வதால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்வதும், அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவதும் பெரும் சவாலாக உள்ளது.

இதனால் பெரும்பாலான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் தங்கள் கல்வியை தொடர்கின்றனர். அத்துடன் தற்போது அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழிக்கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது மதிய உணவு மட்டுமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கப்பளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார். இதனால் அரசு பள்ளிகளை தேர்வு செய்யும் மாணவர்களின் சதவீதம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலமேலுமங்கைபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகள் உள்ன. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக நாடிஅம்மாள் என்பவர் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பேற்றுள்ளார். அவரது பணியின் ஆரம்ப காலத்தில் மிகக்குறுகிய எண்ணிக்கையில் மட்டுமே பள்ளியில் மாணவர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறிப்பாக மாணவர்களின் விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் விதமாக சிலம்பம், யோகா, செஸ், கராத்தே உள்ளிட்ட போட்டிகளை அவர்கள் எளிதில் கற்கும் வகையில் தனி பயிற்சியாளர்கள் உதவியுடன் கற்பித்து வருகிறார். மேலும் காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் நாளிதழ் வாசிக்க வைப்பது மற்றும் பொது அறிவு வளர்க்கும் விதமாக மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடத்துவது உள்ளிட்டவை சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் உடற்பயிற்சி மற்றும் சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சுகாதாரம் குறித்து மாணவர்கள் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் எதிரொலியாக காலை முதல் பள்ளி முடியும் வரை மாணவர்கள் மூன்று முறை கைகளை கழுவும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளனர். தனியார் பள்ளியை போலவே அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஆங்கில வழிக்கல்வியை வழங்ககிறது. இருப்பினும் தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களும் ஆங்கில திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதுபோன்ற முயற்சிகளின் வாயிலாக இப்பள்ளி மாணவ, மாணவிகளின் ஒழுக்கம், கல்வி மீதான ஆர்வம் உள்ளிட்ட செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த கல்வியாண்டில் 30 மாணவர்களுடன் செயல்பட்ட இந்த பள்ளியில் தற்போது 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியருடன் இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

இந்த பள்ளியில் மாணவர்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் வகுப்பறை அருகே மாணவர் மனசு என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், குறைகள் மட்டுமின்றி பள்ளியின் வளர்ச்சிக்கான கருத்துகளை மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் எழுத்து மூலம் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகள் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த பள்ளிக்கான விருதையும் பெற்றுள்ளது. இதேபோல் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் கல்வி மட்டுமின்றி மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் விதமாக சிலம்பம், யோகா உள்ளிட்ட சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags : Panchayat Union Primary School ,Alamelumangaipuram ,Vembakottai ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை