×

கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டும் விவகாரம் ஒத்தக்கடை ஊராட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை, மார்ச் 4: கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் விளக்கம் கேட்டு ஊராட்சிக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்த பொன்.கார்த்திகேயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒத்தக் கடையிலுள்ள கோதண்டராமசாமி கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் காவல் நிலையம் எதிரே உள்ளது. இந்த இடத்தில் சில்வர் பட்டறை கழிவுகள், கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே, கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.ேக.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஒத்தக்கடை ஊராட்சியில் தனது பணியை முறையாக செய்யத் தவறியதால் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கலெக்டர் தரப்பில் ஊராட்சிக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 10க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Othakadai panchayat ,
× RELATED செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்