×

சென்னையில் நெரிசல் மற்றும் அலைச்சலை தவிர்க்க திருவள்ளூரில் 9 நீண்ட தூர விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவள்ளூர்: சென்னையில் ஏற்படும் நெரிசல் மற்றும் நீண்ட தூர அலைச்சலை தவிர்க்கும் வகையில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 9 நீண்ட தூர விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வளர்ந்து வரும் ஒரு முக்கிய தொழில்  நகரமாக திருவள்ளூர் அமைந்துள்ளது. திருவள்ளூர்  நகரை சுற்றி பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.  தற்போது திருவள்ளூர் மாவட்ட அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் திருவள்ளூரில் அமைந்துள்ளது.  மேலும்,  சென்னையில் பணிபுரியும் பலரும் திருவள்ளூர் நகரில் குடிபெயர்ந்து  வருகின்றனர்.  சென்னை சென்றுவர புறநகர் ரயில்கள் இருப்பதால் தினமும்  சென்னைக்கு சென்று வருகின்றனர்.

இதேபோல், திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை  செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கேட்டர் பில்லர்,  டெல்பி டி.வி.எஸ். போன்ற  பெரிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதேபோல் காக்களூர்  தொழில்பேட்டையில் சுமார் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன.  இது திருவள்ளூர்  நகருக்கு மிக அருகில் அமைந்துள்ளது.  சென்னையின் மிகப்பெரிய  தொழிற்பேட்டையான ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை திருவள்ளூர் ரயில்  நிலையத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில்,  ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் வேலை செய்பவர்களுக்கு உகந்த ரயில்  நிலையமாக திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது.  மேலும், அங்குள்ள பல  நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த  தொழிலாளர்கள் பெரும்பாலும் திருவள்ளூர் மற்றும் மணவாளநகர் போன்ற பகுதிகளில்  தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் தங்கள்  சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களையே  பெரிதும் நம்பியுள்ளனர். இதனால், நாளுக்கு நாள் திருவள்ளூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ரயிலை  பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2011ம்  ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 37 லட்சம் மக்கள்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இது மேலும் அதிகரித்தும்  உள்ளது. இவ்வளவு மக்கள் தொகைக்கு ஏற்ற போக்குவரத்து வசதியை ரயில்வே  நிர்வாகம் அளிக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

11 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தை தினசரி ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. இவற்றில் 5 நடைமேடைகள் 24 பெட்டிகளை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் (நின்று) என்று செல்லும் அளவு நீளம் கொண்டது. மேலும், நடைமேடை 1 மற்றும் 2 ஆகியவை விரைவு ரயில்கள் நின்று செல்லும் நடைமேடையாக அமைந்துள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வது சுலபம்.  இந்த நடைமேடைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கூடுதலாக 4 நிமிடங்கள் மட்டுமே செலவாகும். இதனால் ரயில்வே கால அட்டவணை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. நீண்டத்தூர ரயில்கள் இந்த 4 நிமிட நேரத்தை வண்டி செல்லும் வேகத்திலேயே ஈடு செய்ய முடியும்.

திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக 60  எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றன. இவற்றில் 11 ஜோடி ரயில்கள் மட்டுமே  நின்று செல்கின்றன.  மேலும் சென்னை - கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ்,   சென்னை - பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சென்னை- கோவை இன்டர்சிட்டி  எக்ஸ்பிரஸ், சென்னை -  பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ்,  செங்கல்பட்டு   காச்சேகுட எக்ஸ்பிரஸ், சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ்,   சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை - மும்பை எல்டிடி எக்ஸ்பிரஸ்,  சென்னை - பெங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆகிய 9  எக்ஸ்பிரஸ் ரயில்கள்  திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ரயில்  பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனால் சுமார் 10 லட்சம் மக்கள் பயனடைய வாய்ப்பிருக்கிறது. மேலும், சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி, போரூர் போன்ற பகுதியில் உள்ள மக்களும் மாநகர பேருந்துகள் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து  விரைவு ரயில்களில் செல்ல வசதியாக இருக்கும். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் வண்டிகள் பெரும்பாலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. இது சென்னை புறநகர் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.  

அதேபோல் திருவள்ளூர் ரயில் நிலையத்தை தாம்பரத்தை போன்று, புறநகர் ரயில்களின் முனையமாகவும், தாம்பரத்தை போல திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் பெரும்பாலான ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூரில் நீண்ட தூர விரைவு  ரயில்கள் நின்று செல்வதால், திருவள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சென்னை -  திருவள்ளூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள  பயணிகளும் சுலபமாக திருவள்ளூர் வரை புறநகர் மின்சார ரயில்களில் வந்து  விரைவு ரயில்களில் ஏதுவாக இருக்கும். இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

* முக்கியத்துவம் வாய்ந்த பகுதி
திருவள்ளூரில் நீண்ட தூர ரயில்கள்  நின்று செல்வதன் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள்  கூட்டத்தையும் சற்று குறைக்க முடியும். 2020ம் ஆண்டு அரசின் புள்ளி  விவரத்தில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் தனி  நபர் வருமானம் ரூ.3.84 லட்சம் என முதல் இடத்திலும், கோவை ரூ.3.35 லட்சம் என  இரண்டாம் இடத்திலும் மற்றும் சென்னையில் 2.66 லட்சம் என மூன்றாம்  இடத்திலும் உள்ளது. அதேபோல மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) திருவள்ளூர்  மாவட்டம் ரூ.1,67,000 கோடி என முதல் இடத்திலும், சென்னை ரூ.1,47,000 கோடி என  இரண்டாம் இடத்திலும், கோவை ரூ.1,37,000 கோடி என மூன்றாம் இடத்திலும் உள்ளது.

* வருவாய் அதிகரிக்கும்
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூர் ரயில்  நிலையத்திலிருந்து பல்வேறு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 21  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதிலிருந்து  திருவள்ளூர் மாவட்டத்தில் எவ்வளவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணி  புரிகின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. எனவே, திருவள்ளூர் ரயில்  நிலையத்தில் நிரந்தரமாக வட மாநில ஊர்களுக்கு செல்லும் ரயில்கள் நின்று  சென்றால் பலரும் பயன்படுத்தி பயனடைவார்கள். இதனால், ரயில்வே  நிர்வாகத்திற்கும் வருவாயும் அதிகரிக்கும்.

* தென்னிந்தியாவின்
முதல் ரயில் சேவை
தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து  1.7.1856ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் நாள், ஒரு ரயில் ராயபுரத்தில்  இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கும். 2வது ரயில் ராயபுரத்தில்  இருந்து திருவள்ளூருக்கும் இயக்கப்பட்டது.  தென்னிந்தியாவில் முதல் ரயில்  போக்குவரத்து திருவள்ளூருக்கு இயக்கப்பட்டது என்பது வரலாறு. இதில், அன்று  முதல் இன்று வரை திருவள்ளூர் நகர மக்களுக்கு ரயில் போக்குவரத்து என்பது  இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

Tags : Thiruvallur ,Chennai ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி