அரியலூர்: அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடக்கி வைத்து, பேசுகையில், நம் முன்னோர்களின் பல்வேறு தியாகங்களின் மூலமே நாம் இப்போது சுதந்திரமாக வாழ்கின்றோம். அவர்களை நாம் மன உணர்வோடு நாள்தோறும் நினைவு கூர்ந்து, அதன்படி வாழ வேண்டும்.தொழில் தொடங்குவதற்கு பல்வேறு கடன் உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு புதிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகளும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தங்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். ஒன்றிய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குநர் காமராஜ் கண்காட்சியின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மலர்விழி, மாவட்ட சித்த அலுவலர் காமராஜ், கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் அன்பரசி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார்.முடிவில் கள விளம்பர உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார். கண்காட்சியில் கலைமணி கலைக்குழுவினரின், அரசின் சாதனை விளக்க கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
