பேராவூரணி, மார்ச் 2: வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலையை கண்மூடித்தனமாக உயர்த்தியிருக்கும், ஒன்றிய அரசின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் வர்த்தக காஸ் சிலிண்டருக்கு ரூ.351 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரி பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. சர்வேதச சந்தையில் விலை உயரும்போதெல்லாம் விலையை அதிகரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விலை குறையும்போது குறைப்பதில்லை. மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்றால் விலையை மாற்றி அமைக்காமல் ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பின்பும் விலையை ஏற்றுவதை ஒன்றிய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிந்த நிலையில் விலை ஏற்றி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வீட்டு சிலிண்டருக்கு ரூ.50, வர்த்தக காஸ் சிலிண்டருக்கு ரூ.351 அதிகரித்துள்ளது. பொதுமக்கள் சில்லறை கடை வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல்வேறு பொருட்களின் தொடர் விலையேற்றத்தினால் பொதுமக்களின் வாங்கும் சக்தி குறைந்து விற்பனை மந்தமாக உள்ள நிலையில் காஸ் சிலிண்டர் விலை உயர்வு சில்லரை வியாபாரிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஏழை ,சாதாரண அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் உள்ள விலையேற்றம் ஒன்றிய அரசின் மீது கடும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.வீடு மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருட்களின் விலையேற்றம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை படிப்படியாக உயரும். அந்த காலகட்டத்தில் மக்களின் வருமானமும் ஓரளவு உயர்ந்திருக்கும் இதனால் விலையேற்றம் பாதிப்பாக தெரியாது.
இப்போது சில்லரை வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு நாளும் வருமானத்தை இழந்து வரும் நிலையில், விலையேற்றம் என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இதனால் ஒன்றிய அரசின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
