×

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 2: புதுக்கோட்டையில் தமிழ்ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்படுவதையொட்டி நேற்று விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார். இதில் 400க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை காந்திபூங்கா அருகிலிருந்து, தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி (நேற்று) கொடியசைத்து துவக்கி வைத்து, தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசு அலுவலர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவுகூறும் வகையில், ஆட்சிமொழிச் சட்டவாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.3.2023 முதல் 8.3.2023 வரை கொண்டாடப்படுகிறது.

இந்த விழிப்புணர்வு பேரணியில், அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று, ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு, அன்னைத் தமிழே ஆட்சி மொழி, தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே, தமிழில் கையொப்பமிடுவோம் தமிழர் நாம் என்று பாடுவோம், விழிபோலெண்ணி நம் தமிழ் காக்க வேண்டும், அமுத தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டி மகிழ்வோம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணியானது, புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து தொடங்கி நகர்மன்றத்தை சென்றடைந்தது.

இப்பேரணியின்போது தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கும், சார்நிலை அலுவலகங்களுக்கும், உள்ளாட்சிநிலை அலுவலகங்களுக்கும், தன்னாட்சிநிலை அலுவலகங்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலைகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (தமிழ்வளர்ச்சித்துறை) முனைவர் நாகராசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Language Week ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...