×

மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாஞ்சோலை சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் தாமதம்

நெல்லை, பிப். 28: மாஞ்சோலை சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் வனத்துறை தாமதம் செய்து வருவதாக நெல்லையில் நடந்த மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்பி பேசினார். நெல்லை மாவட்டத்தில் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு திட்டப் பணிகள் குறித்து வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஞானதிரவியம் எம்.பி தலைமையில் நடந்தது. கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஞானதிரவியம் எம்பி பேசுகையில்,  குடிநீர் பிரச்னையை தீர்க்க நெல்லை  மாவட்டத்தின் 6 புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.  அரியநாயகிபுரம் கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  

மாஞ்சோலை செல்லும்  சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை பயன்படுத்தி  உடனே சாலை அமைக்க வேண்டும். மாஞ்சோலையில் 1500 குடும்பங்கள் உள்ளனர். அங்கு பிஎஸ்என்எல் டவர்  சரியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் டவர் சரியாக  செயல்படாததால் அங்குள்ள மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல்  அவதிப்படுகின்றனர். மாஞ்சோலை மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.  கல்லிடைக்குறிச்சியில் குடிசைமாற்று வாரியத்தில் வீடுகள் வழங்க  வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீனதயாள் உபாத்தியாய கிராம மின் வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை திட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், தேசிய நில ஆவணங்கள் கணினிமயமாக்கும் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய மின் ஆளுமை திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், ஷியாம்பிரசாத் முகர்ஜி ரூர்பன் இயக்கம், ஜல்ஜீவன் மிஷின், வேளாண்மை துறை, வனத்துறை, மருத்துவத் துறை, பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அகஸ்தியர் அருவியில் குளிக்க தற்போது ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பணம் யாருக்கு செல்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட வனஅலுவலர்  முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் பஞ்சாயத்து  யூனியன் சேர்மன்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : District Development and Monitoring Committee ,Mancholai Road ,
× RELATED மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக்குழு...