×

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிளஸ்2 மாணவர்கள் களப்பயணம்: கலெக்டர் கலந்துரையாடினார்

நாமக்கல், பிப்.28: நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடி, கல்வி களப்பயணத்தின் வழியாக பெற்ற அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி களப்பயணம் அழைத்துச்செல்ல உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 98 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 940 மாணவ, மாணவிகள், கல்வி களப்பயணத்திற்கு 10 கல்வி நிறுவனங்களுக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த தகவல்கள் கல்லூரி பேராசியரியர்கள் விளக்கினர்.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேற்று களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஆய்வகம், கணினி அறிவியல் உள்ளிட்டவை குறித்து அறிந்தனர். இவர்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Government Medical College ,
× RELATED கரூர் அரசு மருத்துவ கல்லூரி எதிரே...