ஆர்.எஸ்.மங்கலம், பிப். 27: ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்.எஸ். மங்கலம் முக்கியமான ஒன்றாகும். இந்நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய புனித தலங்களான ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் போன்ற இடங்களுக்கு இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அத்துடன் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்ஹா போன்ற புனித தலங்களுக்கு செல்வதற்கும் இங்குள்ள திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு சாலை பிரிந்து செல்லும் இடத்தில் வாகனங்கள் திரும்பும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே இந்த விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் சாலை பிரிவு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், இந்த சாலையில் தற்போது அதிக எண்ணிக்கையில் வாகன போக்குவரத்து உள்ளது. இதற்கிடையே எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் பிரிவு சாலையில் திரும்புகின்றன. அத்துடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலை விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
