×

ஒளவையார் வேடத்தில் அசத்தும் தேவர்சோலை அரசுப் பள்ளி மாணவி

நீலகிரி மாவட்டம் தேவர் சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படிப்பவர் மாணவி மிதுனா. இவரது தந்தை பிரவீன் ரப்பர் தோட்டத்து தொழிலாளி. தாயார் சஜிதா இருவருமே கூலி தொழிலாளர்கள். மாணவி மிதுனா ஓவியம், கட்டுரை, பேச்சு, கவிதை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வட்ட, மாவட்ட, மாநில அளவில் தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

 சமீபத்தில் தேவர் சோலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் அறிவுசால் ஒளவையார் என்னும் இலக்கிய நாடகம் காண்போரை கவர்ந்தது. இதில் முக்கிய கதாபாத்திரமான ஔவையார் வேடமிட்டு நடித்த மிதுனா அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார். இந்த நாடகம் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி சென்னையில் நடைபெற்ற இலக்கிய நாடகப்போட்டியில் இவர் கலந்து கொண்டார்.

ஊட்டியில் மாவட்ட அளவில் நடைபெற்றபோதும், மாநில அளவில் சென்னையில் நடந்த போதும் நாடகத்தில் மிதுனாவின் அவ்வையார் வேடம், நடிப்பு, உச்சரிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது. இம் மாணவியை அனைவரும் எப்பொழுதும் ஒளவையார் என்றே அழைக்கும் அளவிற்கு அவரது நடிப்பில் தனித்திறமை வெளிப்படுகிறது. மேலும் நாடகத்திற்கான ஒப்பனையையும் மேற்கொண்டு, அரச கதாபாத்திரங்களுக்கேற்ற கேடயம், வாள், சாமரம், கத்தி போன்றவற்றை தாமே வடிவமைத்தும் கொடுக்கிறார்.

பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சிறப்பாக நடனமாடும் இவர் உடன் நடனமாடும் தோழிகளுக்கும் நடனத்தைக் கற்றுக்கொடுத்து வருகிறார். பெரிய அளவிலான வசதிகள் இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவி படிப்புடன் கலைகளிலும் ஆர்வம் செலுத்தி வெற்றிவாகை சூடி தான் படிக்கும் பள்ளிக்கும் பெருமையை சேர்த்து வருகிறார்.

எந்த ஒரு பெண்ணும் முன்னேற துணிவு தான் வேண்டும். போட்டி எதுவானாலும் கலந்து கொள்வதுதான் முதல்படி. அதில் நமது தனித்திறமையை வெளிப்படுத்துவதே வெற்றிக்கு வழி என வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல்பள்ளியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு தனித்திறமையை மேலும் மெருகேற்றிக்கொள்கிறார் மாணவி மிதுனா.
  சக மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்று, கல்வியில் திறமையாக படிப்பதோடு கலைத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி அரசுப் பள்ளிக்கு பெருமை சேர்த்து வரும் இந்த மாணவிக்கு பள்ளியின் 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த மாணவிக்கான கேடயம் பள்ளி ஆண்டு விழாவில் கூடலூர் தாசில்தார் சித்தராஜ் மூலம் வழங்கப்பட்டது.

நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வரும் மாணவி மிதுனா, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகி கிராமப்புறங்களில் மருத்துவ சேவை வழங்குவது தனது குறிக்கோள் என்றும், கிராமப்புற மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் கிடைப்பதில் உள்ள பிரச்னைகளை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது இவரது ஆர்வமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மாணவர் அரங்கம் மாணவ செல்வங்களே...!
திங்களன்று வெளியாகும் இப்பகுதிக்கு கல்வி, விளையாட்டு, கலைப்பிரிவுகளில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் தனித்திறன் படைப்புகளை உங்களின் தலைமையாசிரியர் கையெழுத்துடன் அனுப்பி வைக்கலாம். புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சிறப்புடன் செயல்படும், தனித்துவமிக்க அரசுப்பள்ளிகள் குறித்த தகவல்களை, ஆசிரியர்கள் உரிய விபரங்களுடன் எழுதி படங்களுடன் அனுப்பி வைக்கலாம்.

Tags : Asathum Devarcholai ,Olavaiyar ,
× RELATED விவசாய பிரச்சனைகளை தீர்க்காமல்...