×

பைபாஸிலே பறக்கும் அரசு- தனியார் பஸ்கள் ‘காத்தாடும்’ கொடைரோடு பஸ் ஸ்டாண்ட்: அனைத்து தரப்பினரும் அவதி

நிலக்கோட்டை, பிப். 27: கொடைரோடு பஸ் நிலையத்தை புறக்கணித்து அரசு- தனியார் பஸ்கள் நான்கு வழிச்சாலையிலே செல்வதால் போதிய பஸ்கள் கிடைக்காமல் அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு, அம்மையநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் கொடைரோடு பஸ் நிலையமானது திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை அருகே அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சுற்றியுள்ள 300 கிராமங்கள் மற்றும் தேனி, போடி, கம்பம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள், அலுவலர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் இப்பஸ் நிலையம் எதிரே எதிரே ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரசித்தி பெற்ற கொடைரோடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ரயில் மூலம் தென் வட தமிழகம் மட்டுமின்றி கொடைக்கானல், மூணாறு, இடுக்கி, தேக்கடி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் கொடைரோடு பஸ்நிலையத்திற்கு தினந்ேதாறும் வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து பஸ்களில் செல்வர்.

இப்பஸ் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன. இவ்வாறு எப்போதும் பரபரப்பாக காணப்படும் பஸ்நிலையமாக செயல்பட்டு வந்ததால் கொடைரோடு நகரமே தமிழகத்தின் இரண்டாவது தூங்கா நகரமாக இரவு பகலாக இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையால் திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் கொடைரோடு பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாமல் நேரமாக நான்கு வழிச்சாலையிலே சென்று வந்தன. இதனால் நாளைடைவில் இப்பஸ் நிலையம் பராமரிப்பின்றியும், எவ்வித அடிப்படை வசதிகளின்றியும் கைவிடப்பட்ட பஸ்நிலையமாக தற்போது காட்சியளித்து வருகிறது. இதேநிலை அம்மையநாயக்கனூர் பஸ்நிலையத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடைரோடு அனைத்து விவசாயிகள் சங்கதலைவர் மாதவன் கூறுகையில், ‘கொடைரோடு, அம்மையநாயக்கனூர் பஸ்நிலையங்களுக்கு தினந்தோறும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள், அலுவலர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். மேலும் கொடைரோடு பஸ் நிலையத்தையொட்டி பூமார்க்கெட்டும் அமைந்துள்ளதால் ஏராளமான வெளியூர் வியாபாரிகளும் வந்து சென்றனர். ஆனால் திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் தற்போது பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இப்பஸ் நிலையங்களை புறக்கணித்து நேராக செல்கிறது. திண்டுக்கல், மதுரை பஸ் நிலையங்களில் இருந்து வரும் போது கூட கொடைரோடு, அமையநாயக்கனூர் பயணிகளை பல பஸ்கள் ஏற்ற மறுத்து, கடைசி நேரத்தில் ஏற்றி நின்று கொண்டே வர வைக்கும் அவலநிலை தான் உள்ளது.

இதனால் பஸ் கண்டக்டர்கள், பொதுமக்கள் இடையே அடிக்கடி வாய்த்தகராறு, பிரச்னைகள் ஏற்பட்டு போலீஸ் நிலையத்தில் பல புகார்களும் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இல்லாததால் மாணவ- மாணவிகள், அலுவலர்கள், விவசாயிகள் அபாயகரமாக தொங்கி கொண்டு செல்லும் அவல நிலையும் உள்ளது. தற்போது தமிழகத்தை சிறப்பாக வழிநடத்தி நேரடியாக களஆய்வு செய்து மக்கள் பணியாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்ந வழியில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போல மீண்டும் அனைத்து பஸ்ககளும் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் பஸ் நிலையங்களுக்கு வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல நகர்புற வளர்ச்சி கழகம், பேரூராட்சி துறை இணைந்து பிரசித்தி பெற்ற கொடைரோடு பஸ்நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தி புதிய கட்டமைப்புகளை உருவாக்கி விசாலமான பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்’ என்றார்,

Tags : Kathatum ,Kodairod ,
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி