×

தம்பியை அடித்து கொன்று சடலத்தை செப்டிக் டேங்க்கில் புதைத்த அண்ணன் கலசபாக்கம் அருகே பரபரப்பு மதுபோதையில் நள்ளிரவு பயங்கரம்

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நள்ளிரவில் தம்பியை அடித்துக்கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் புதைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன்(68). இவரது மகன்கள் ஏழுமலை(47). திருமலை(44), விவசாய கூலி தொழிலாளர்கள். இதில், ஏழுமலைக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையின் மனைவி அவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். திருமலைக்கு திருமணம் ஆகவில்லை. ஏழுமலையும், தம்பி திருமலையும் கீழ்குப்பம் கிராமத்தில் அருகருகே வசித்து வந்தனர். தினந்தோறும் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, மது குடித்துவிட்டு வருவது வழக்கமாம். அப்போது, இருவருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்படுவது அடிக்கடி நடந்துள்ளது.
.
இதேபோல், நேற்று முன்தினம் இரவும் 11 மணியளவில் ஏழுமலை, திருமலை ஆகிய இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், மதுபோதையில் இருவருக்கும் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த அண்ணன் ஏழுமலை, தம்பி திருமலையை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த திருமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை உடனே சடலத்தை அப்புறப்படுத்த நினைத்துள்ளார். அதன்படி, சடலத்தை தங்களது வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க்கில் போட்டு லேசாக மண்ணை போட்டு புதைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்குள் வந்துவிட்டார்.

தொடர்ந்து, நேற்று காலை கண் விழித்ததும் வழக்கம்போல் ஏழுமலை கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், தம்பியை கொன்றுவிட்டதில் குற்ற உணர்ச்சியில் இருந்த அவர், இதுகுறித்து அங்கிருந்த சக தொழிலாளர்களிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி குமார், கடலாடி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஏழுமலை அளித்த தகவலின்பேரில், திருமலை சடலத்தை செப்டிக் டேங்க்கில் இருந்து மீட்டனர். பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதை தகராறில், தம்பியை அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Anna ,Kalasabakkam ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு