சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (28ம் தேதி) வைகுந்தத்தில் நடக்கிறது. இதுதொடர்பாக சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (28ம் தேதி) செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு, வைகுந்தத்தில் உள்ள சரவணபவன் ஹோட்டலில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
எனவே, சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இந்நாள்-முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழகத்தின் துணை அமைப்புகளான இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, தொண்டர் அணி, வர்த்தகர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மீனவர் அணி, சிறுபான்மை நலக்குழு உரிமைப் பிரிவு, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்று சூழல் அணி, ஆதி திராவிடர் நலக்குழு ஆகியவற்றின் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
