கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியகுழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள், அதனை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தி பாலியல் குற்றங்களை தடுப்பது மற்றும் அதற்கு உரிய பயிற்சியை குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டும், குழந்தை திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள், ஊராட்சிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மைதிலி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா, ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார அளவிலான ஊராட்சி கூட்டமைப்பு குழு உறுப்பினர்கள், அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
