×

கொள்ளிடத்தில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம் காட்சிக்கு வைக்கப்பட்ட பாரம்பரிய நெல் விதைகள்

கொள்ளிடம்: கொள்ளிடம் தனியார் பள்ளியில் இயற்கை விவசாயம், அதன் மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இயற்கை விவசாயமும் அதன் மருத்துவமும் என்ற தலைப்பில், உணவே மருந்து மருந்தே உணவு என்பது குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. ஒற்றை நெல் சாகுபடி நுட்ப நிபுணர் ஆலங்குடி பெருமாள் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் முருகேசன் வரவேற்றார். நெல் ஜெயராமன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயர்மட்டகுழு தலைவர் அசோகன், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தனர். அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் வெட்டாத்தங்கரை விசுவநாதன், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தங்கசபா, சரவணன், முருகன் ஆகியோர் இயற்கை வேளாண்மை குறித்து பேசினர்.

தமிழர் வேளாண்மை மற்றும் தமிழர் மருத்துவம் அமைப்பைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் கலந்து கொண்டு பேசுகையில், உணவே மருந்து, மருந்தே உணவு என்பதுதான் இயற்கை உணவு.  எனவே இயற்கை விவசாயத்தை நாம் பின்பற்றினால் எந்த நோயும் வராமல் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். நமது முன்னோர்கள் இயற்கை விவசாயத்தை பின்பற்றி உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையை கொண்டு வந்தனர். இதனால் நூறாண்டு நலமுடன் வாழ்ந்தனர். ஆனால் இன்று ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தும் போது அதன் மூலம் விளைந்த உணவு தானியங்களால் நமக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்வாய்ப்படுகிறோம். எனவே வரும் காலத்தில் தொடர்ந்து நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நமது பாரம்பரிய பயிர் சாகுபடியான இயற்கை வேளாண்மையை முறையை நாம் இப்பொழுதிலிருந்தே பின்பற்ற பழகிக்கொள்ள வேண்டும் என்றார். கருத்தரங்கில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் கனகசபை நன்றி கூறினார்.

Tags : Kollid ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சாதனை சிலம்பாட்டம்