×

கொள்ளிடம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

கொள்ளிடம், பிப்.26: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பரவலாக உரிய நிலங்களில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு மணற்பாங்கான நிலப்பரப்பு அவசியமாகிறது. மணற்பாங்கான நிலப்பரப்புகளில் மட்டுமே பூமிக்கு அடியில் நிலக்கடலை எளிதில் நன்கு வளர்ந்து பலன் தரும். கடினமான நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்வது அரிதான ஒன்று. இந்நிலையில் கொள்ளிடம் பகுதியில் ஆச்சாள்புரம், புளியந்துறை, தாண்டவன்குளம், தற்காஸ், குன்னம், மாதிரவேளூர், வேட்டங்குடி, வடகால், எடமணல், அகரவட்டாரம், பச்சபெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மணற்பாங்கான இடங்களில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா அறுவடைக்கு பிறகு பெரும்பாலும் உளுந்து மற்றும் பயறு ஆகிய பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த வருடம் உளுந்து, பயறு விதைப்பு செய்வது குறைந்துவிட்டது. இந்த வருடம் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சம்பா நெற்பயிர் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் காலம் தவறி நெற்பையிரை அறுவடை செய்யக்கூடிய நிலை உருவானது. இதனால் உளுந்து மற்றும் பயறு சாகுபடி போதிய அளவில் செய்ய முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. இந்நிலையில் கொள்ளிடம் பகுதியில் உளுந்து மற்றும் பயரு சாகுபடி சென்ற வருடத்தை விட குறைந்து விட்டாலும் கடலை பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் வட்டாரத்திலேயே சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் கடலை பயிரிடப்பட்டு விவசாயிகள் அதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கடலை பயிர் செய்ய பெரும்பாலும் மின்மோட்டார் அல்லது டீசல் இன்ஜினை பயன்படுத்தி நிலத்தடி நீரை எடுத்து கடலை பயிருக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கடலை பயிரின் காலம் 110 நாட்களாகும்.

மழைக்காலம் முடிந்த பிறகு நிலங்களை பக்குவப்படுத்தி குறிப்பிட்ட நிலங்களில் மட்டுமே கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் கடலை பயிர் சாகுபடி துவங்கி மார்ச் மாத இறுதிக்குள் அறுவடை செய்யப்பட்டு விடுகிறது. தற்போது கொள்ளிடம் பகுதியில் 60 நாள் பயிராக கடலை பயிர் வளர்ச்சி அடைந்துள்ளது. கடலை பயிரை அதிகம் பூச்சி தாக்குவது இல்லை. அப்படி பூச்சி தாக்குதல் ஏற்பட்டாலும் அதனை உரிய ரசாயன மருந்து தெளித்து எளிதில் கட்டுப்படுத்தவும் முடிகிறது. இதனால் பூச்சி தாக்குதல் கடலை விவசாயிகளை பெரிதும் பாதிப்ப பாதிப்பதில்லை. கடந்த வருடம் கடலை பயிரில் பரவலாக பூச்சி தாக்குதல் இருந்து வந்தது. ஆனால் இந்த வருடம் பூச்சி தாக்குதல் மிகவும் குறைந்துள்ளது என்கின்றனர் கடலை விவசாயிகள்.

இதுகுறித்து ஆச்சாள்புரத்தில் கடலை சாகுபடி செய்துள்ள விவசாயி வீரபாண்டியன் கூறுகையில், கடலை சாகுபடிக்கு மணற்பாங்கான நிலம் தேவைப்படுகிறது கடலை சாகுபடி விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபத்தையும் தரக்கூடியதாக உள்ளது. இதற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பயிரிட்ட 100 முதல்110 நாளில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. உரிய காலத்தில் பொட்டாசு உரம் இடுவது அவசியமாகும்.கடலை பயிர் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 50,000 செலவழிக்க வேண்டும். அப்படி செலவு செய்தால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்றார். எனவே விவசாயிகள் சம்பா அறுவடைக்குப் பிறகு கடலை பயிரை சாகுபடி செய்வதன் மூலம் அதிக பாதிப்புகள் ஏதும் இன்றி லாபம் பெற முடியும். எனவே விவசாயிகள் அதிக அளவில் கடலை சாகுபடி செய்ய வேண்டும் என்றார்.

Tags : Kollidham ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்