×

மாணவர்களிடம் வாசிப்பு பழக்கம் அதிகரிக்க வேண்டும் நெல்லை புத்தக திருவிழாவில் கலெக்டர் கார்த்திகேயன் அறிவுரை

நெல்லை,பிப்.26: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் வாசிப்பு பழக்கம் அதிகரிக்க வேண்டும் என நெல்லையில் நடந்த புத்தக விழா துவக்க நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். பாளை வஉசி விளையாட்டு மைதானத்தில் பொருநை நெல்லை 6வது புத்தக திருவிழா துவக்க விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இவ்விழா வரும் மார்ச் 7ம் தேதி வரை நடக்கிறது. புத்தக திருவிழாவை  கலெக்டர் கார்த்திகேயன் துவக்கி வைத்து பேசியதாவது:
பொதுமக்களிடையே வாசிப்பு திறன் முன்பெல்லாம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது வாசிப்பு திறன் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரிக்க வேண்டும். இதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

 உன்னதமான நிலைக்கு உயர்ந்தவர்கள் அடிக்கடி புத்தகங்களை படித்துக்கொண்டே இருப்பார்கள். அது தொடர்பான ஒரு கதையை கூறுகிறேன். ஜென் துறவியை ஒருவர் சந்தித்து எனக்கு தெரிந்தளவில் படித்துள்ளேன் என கூறினார். அதற்கு துறவி அவரை பார்த்து இன்னும் படி என்றார். இதனால் சாதாரண நிலையிலிருந்து அவர் உயர்வடைந்தார். பின்னர் மீண்டும் துறவியை அவர் பார்த்தார். அப்போது துறவி அவரிடம் மீண்டும் படி என கடைசி காலம் வரை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் அவர் உன்னதமான நிலைக்கு உயர்ந்தார். இந்த சிறிய கதையிலிருந்து என்ன தெரிகிறது என்றால் வாழ்க்கையில் படித்துக்கொண்டே இருப்பவர்கள் வெற்றியை தொட்டு விட முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். புத்தக திருவிழாவில் சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், சேலம், விருதுநகர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து புத்தக ஸ்டால்கள் அமைத்துள்ளனர். இதில் 125 புத்தக ஸ்டால்கள் உள்ளன. ஸ்டால்களில் ராமாயணம், மகாபாரதம், காமிக்ஸ், தமிழ் வைத்தியம், சிவில் மற்றும் கிரிமினல் தொடர்பான சட்ட புத்தகங்கள், தமிழ் மருத்துவ குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய விளையாட்டு
புத்தக  திருவிழாவையொட்டி வஉசி மைதானத்தில் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாணவ, மாணவிகளுக்கு கோலிக்காய், பம்பரம், வண்டி உருட்டுதல், கூந்த வண்டி, பச்சை  குதிரை, கயிறு இழுத்தல், ஆடும் ஓநாயும், கயிறு தாண்டுதல் ஆகியவை பயிற்சி  அளிக்கப்படுகிறது. மேலும் சிறுமிகளுக்கு பாண்டி, குலை குலையா  முந்தரிக்காய், 7ம் கல் விளையாட்டு, பல்லாங்குழி, தாயம் கட்டம், பாம்பு  கட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களின் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும்  பார்வை திறனற்ற மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு பயிற்சி வகுப்பு மற்றும்  போட்டிகளும் நடக்கின்றன. துவக்க நாளான நேற்று நடந்த போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவிகள் கலைநிகழ்ச்சி
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் முதல் நாளே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சுமார் ₹9 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையானது. 500 ரூபாய்க்கு  புத்தகம் வாங்கும் பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமும் தலா மூன்று பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும் தென் மண்டல சிறை துறை டிஐஜி பழனி, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்கு சரவணகுமார், தலைமையிடம் அனிதா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பேசினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு அரங்கங்கள்
இந்த ஆண்டு 6வது நெல்லை பொருநை புத்தக திருவிழா ‘அனைவருக்குமான பன்முக தன்மை’ என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றுதிறனாளிகள் ஆகியோரை உள்ளடக்கியது. இதன் அடிப்படையில் முதல் 3 நாட்கள் மாற்று திறனாளிகளுக்கான 22 சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் இடம் பெறும் வகையில் வீல்சேர் கால்பந்து, தொடு முறையில் வண்ணம் தீட்டுதல், மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி நடைமுறைகள், மாற்று திறனாளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை, பார்வையற்றோருக்கு ஏற்ற வகையில் சாதாரண புத்தகங்களை இபுத்தகங்களாக எளிதாக மாற்றும் முறைகள் ஆகியவை உள்ளடங்கியவையாகும்.

Tags : Karthikeyan ,Nellie Book Festival ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை