×

ரெட்டியார்பட்டி- மகாராஜநகர், மேலப்பாளையம்- பேட்டையை இணைக்கும் வகையில் நெல்லையில் 2 புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் மும்முரம் மாநகருக்குள் வரவேண்டியதில்லை

நெல்லை, பிப்.26: நெல்லை மாநகராட்சி சார்பில் 2 புதிய இணைப்பு சாலை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. இதன்படி ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலையில் இருந்து ஜெபா கார்டன் அருகே வரையிலும் மற்றும் பேட்டை - மேலப்பாளையம்  இடையே புதிய இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றன.இதனால் இந்தப்பகுதிக்கு புறநகரில் இருந்து வருபவர்கள் நகர மையபகுதிக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. நெல்லை மாநகராட்சி பகுதியில் மக்கள் நெருக்கம், வாகன நெருக்கம், வீதிகள் நெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதல் சாலை வசதியின்றி பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கூடுதல் புறவழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறு ஆய்வு செய்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்படி தற்போது 2 இடங்களில் புதிய இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. ஒன்று மகாராஜநகர் மற்றும் அதன் தென்பகுதி விரிவாக்க நகரங்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைகிறது. இந்த சாலை மூலம் உழவர்சந்தை பகுதி, அன்புநகர், பெருமாள்புரம், என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதிகள் பயனடையும். கன்னியாகுமரி - மதுரை நான்குவழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மாநகர எல்லையில் இந்த இணைப்பு சாலை தொடங்கி திருமால்நகர் பகுதி அருகே பயணித்து பெருமாள்புரம், ஜெபா கார்டன், ஜோஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி அருகே இணையும்.  மேலும் இந்தப்பகுதியில் இருந்து எஸ்டிசி கல்லூரி பின்புறம் வழியாக அன்புநகர் வரை இணைக்கவும் திட்டம் உள்ளது. இதற்காக சிறிய அளவில் இடம் ஆர்ஜிதம் செய்யும் முயற்சிகளும் நடக்கின்றன. இது 80 அடி சாலையாக அமைக்கப்பட உள்ளதால் பிரமாண்ட சாலையாக காட்சி அளிக்கும்.  இந்த இணைப்பு சாலைப்பணிகள் தற்போது மும்முரமாக நடக்கிறது. தற்போது சரள் மண் விரிப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் தார் சாலையாக மாற்றப்படுகிறது.

இதுபோல் பேட்டை- மேலப்பாளையம் இடையே அமையும் இணைப்பு சாலைப்பணிகளும் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாலை மேலநத்தம் அருகே தொடங்கி டவுன் நகரின் வெளிப்பகுதி வழியாக பேட்டை நகரை தொடும் வகையில் அமையும்.மேலநத்தம் பகுதியில் ஏற்கனவே ஒரு இணைப்பு சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. எனவே இதையும் கருத்தில் கொண்டு இச்சாலை பணி நடைபெற ஏற்பாடுகள் நடக்கிறது. பேட்டையில் இணையும் பகுதி விரைவில் முடிவு செய்யப்பட்டு பணி நடைபெறும். இந்த இருச்சாலைகளும் முழுமை பெறும் போது இப்பகுதி மக்கள் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் போதும், உள்ளே வரும் போது மாநகர உள்பகுதி சாலைகளை பயன்படுத்த தேவை இருக்காது. இந்த சாலைப்பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nellai ,Redyarpatti ,Maharajanagar ,Melapalayam ,Pettai ,
× RELATED அன்புநகர் திரும்ப ‘ஒய்’ வடிவ...