×

கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நீலகிரியில் பெருகி வரும் பிளாஸ்டிக் கிணறுகள்

ஊட்டி, பிப். 26: கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பிளாஸ்டிக் கிணறுகள் அமைத்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழையும் பெய்யும். அதன்பின், 6 மாதங்கள் மழை பெய்யாது.

இது போன்ற சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ள அனைத்து கிணறுகளும் காய்ந்து போன நிலையில் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற சமயங்களில் சில விவசாயிகள் லாரிகளில் தண்ணீர் வாங்கி அவைகளை சேமித்து வைத்து பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் சாதாரண கிணறுகளில் தண்ணீர் சேமித்து வைக்க முடிவதில்லை. கிணற்றில் உள்ள தண்ணீர் நிலத்திற்குள் சென்று விடுகிறது.

இதனை கட்டுப்படுத்தவும் அதே சமயம் தண்ணீரை சேமித்து வைக்கவும், நிலத்திற்குள் செல்லாமல் இருக்க தற்போது செயற்கை குளங்களை அமைத்துக் கொள்கின்றனர். விவசாய நிலங்களுக்கு நடுவே பிளாஸ்டிக் பேப்பர்களை கொண்டு கிணறுகளை சுற்றிலும் வைத்து மூடி விடுகின்றனர். இதனால், இயற்கையாக சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் லாரிகளில் வாங்கும் தண்ணீர் சிறிதளவும் வீணாகாமல் பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது. முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை, அணிக்கொரை, தொரைஹட்டி, இடுஹட்டி போன்ற பகுதியில் தற்போது பெரும்பாலான விவசாய நிலங்களில் இது போன்று பிளாஸ்டிக் கிணறுகள் அமைக்கப்பட்டு தற்போது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னை குறைந்துள்ளது. மேலும், தற்போது பெரும்பாலான விவசாயிகள் இதுபோன்ற பிளாஸ்டிக் கிணறுகள் அமைத்து வருகின்றனர்.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...