அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்தி குறிப்பு ; தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம் ஆகும். இந்த திட்டம் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது. சம்பல் மொபைல் செயலியானது, தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் ஓய்வூதியம் பெற பதிவு செய்திடவும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ளவும் உதவுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல், நேரடிப் பயன் பரிமாற்றம் குறித்த விபரம், மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் தபால் நிலையங்கள் குறித்த விபரங்களை அறிய உதவியாக உள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரில், சம்பல் மொபைல் செயலியினை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.
