×

பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும்: தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் டிஆர்ஓ பேச்சு

அரியலூர், பிப்.24: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கூட்டரங்கில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்-நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலும், நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின்கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நேற்று அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ் பெருமிதம் - துணுக்குகள் வாசிப்பு, மாபெரும் தமிழ் கனவு காணொளி, முதல் சொற்பொழிவு, கேள்வி-பதில் பகுதி, இரண்டாம் சொற்பொழிவு, கேள்வி-பதில் பகுதி, பரிசளிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் துணுக்குகள் வாசிப்பில் சிறந்து விளங்கிய 5 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பெருமிதச் செல்வன், செல்வி பட்டம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், சிறந்த முறையில் கேள்விகள் கேட்ட 3 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா ``பெண்ணுக்குள் ஞான ஒளி’’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு கருத்துகள் குறித்தும், இதுபோன்று யாழினி கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்ட வரலாறு என்ற தலைப்பின் கீழ் பல்வேறு கருத்துகள் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் தமிழர் பெருமிதங்கள் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. இதேபோன்று பொது நூலகத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சியின் மூலம் நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர் கண்ணன், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் முத்துகிருஷ்ணன், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tamil Dream Lecture ,
× RELATED சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் சாதனை