×

பன்னீர் கோட்டகம் கிராமத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்

கொள்ளிடம்,பிப்.24: பன்னீர்கோட்டகம் கிராமத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து புத்தூர், திருமயிலாடி, கொப்பியம், மாதானம், பழையபாளையம் வழியாக தாண்டவன்குளம், புதுப்பட்டினம், பழையாறு ஆகிய இடங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையின் நடுவே பூமிக்கு அடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் செல்லும் குழாய் புதைக்கப்பட்டு சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பனங்காட்டாங்குடி கிராமத்தில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து சக்தி வாய்ந்த மின்மோட்டோர்களை கொண்டு தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் வழியே எடுத்துவரப்பட்டு பழைய பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள நிலத்தடி நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் தேக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 10 கிராமங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

இந்த குடிநீர் குழாயில் பன்னீர் கோட்டகம் என்ற கிராமத்தில் நெடுஞ்சாலையின் நடுவே பூமிக்கு அடியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதேபோல் இரு இடங்களில் அப்பகுதியில் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருப்பதால் சென்று சேர வேண்டிய கிராமங்களில் வழக்கமாக கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே குடிநீர் வீணாக வெளியேறுவதை நிறுத்தும் வகையில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை அகற்றிவிட்டு புதியதாக குடிநீர் குழாய் புதைத்து குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Panneer ,Kotakam ,Village ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை