×

கோடப்பமந்து கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க கான்கீரிட் கட்டிடத்துடன் தடுப்புகள் அமைக்கும் பணி

ஊட்டி, பிப். 24: ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் ரூ.77 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் கான்கீரிட் கட்டிடத்துடன் கூடிய 7 மீட்டர் உயர தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி ஏரி ஆங்கிலேயர் காலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைய துவங்கியது. நகரின் நடுவே சுமார் 2 கிமீ தூரம் பயணித்து கோடப்பமந்து கால்வாயில் வரும் தண்ணீர் ஏரியில் கலக்கிறது.
கால்வாயின் இருபுறமும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருந்து அனைத்து விதமான கழிவுகளையும் இதில் கொட்டி விடுகின்றனர். இதுதவிர, மழை சமயங்களில் அடித்து வரப்படும் மண் குவியல்களும் ஏரியில் குவிகின்றன. இதனை தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குப்பைகள் கால்வாயில் வீசி எறிவதை தடுக்கும் நோக்கில் கால்வாயின் இருபுறமும் பக்கவாட்டில் தகர சீட் கொண்டு 7 மீட்டர் உயரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இந்த சூழலில் கால்வாயின் நடுவே பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து கழிவுநீர் கசிந்து ஏரி நீர் அசுத்தம் அடைந்து வந்தது. இதனால், ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கோடப்பமந்து கால்வாயை தூர்வாறும் பணி மற்றும் கால்வாயில் உள்ள பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி ஆழ்நுழை துவாரங்கள் கட்டும் பணிகள் 2020ம் ஆண்டு துவக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஏடிசி டவுன் பஸ் நிலையம், பஸ் நிலைய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கால்வாயின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த உயர தடுப்புகள் அகற்றப்பட்டன. ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் ஏடிசி தூர்வாரும் பணிகள் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் பொருத்தப்படாமல் திறந்த நிலையில் காட்சியளித்தது. இதனால், கால்வாய்க்குள் குப்பைகள் வீசி எறிவது தொடர்ந்தது. சிலர் இதனை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தினர். உயர தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ரானா சீரமைப்பு பணிக்காக எஸ்ஏடிபி., நிதி ரூ.77 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஊட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள பகுதியில் இருந்து ஏடிசி., வரை பல இடங்களிலும் கால்வாயின் ஒரு புறத்தில் திறந்த நிலையில் உள்ள உயர தடுப்புகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு 7 அடி உயரத்திற்கு கான்கீரிட் கட்டிடம் மற்றும் உயர தடுப்பு அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,``கோடப்பமந்து கால்வாயில் ஒருபகுதியில் பல இடங்களிலும் திறந்த நிலையில் இருந்த பகுதிகளில் ரூ.77 லட்சம் மதிப்பில் 7 மீட்டர் உயரத்திற்கு உயர தடுப்பு அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்’’ என்
றனர்.

Tags : Kodappamandu Canal ,
× RELATED கோடப்பமந்து கால்வாய், சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு