ஊட்டி, பிப். 24: ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பெண் வக்கீல்கள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஊட்டி நகரில் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. தற்போது, புதிதாக பிங்கர்போஸ்ட் காக்கா தோப்பு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் கடந்த மாதம் முதல் அங்கு இயங்கி வருகிறது. துவக்கத்தில் வக்கீல்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ள துவங்கினர். இந்நிலையில், பெண்களுக்கு என்று ஓய்வு அறை எதுவும் இல்லாத நிலையில், தங்களுக்கு ஒரு அறை ஒதுக்கி தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பெண் வக்கீல்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, அவர்களுக்கு ஊட்டி நீதிமன்றத்தில் ஒரு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அறையை நீலகிரி பொறுப்பு நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான வேலுமணி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெண் வக்கீல்கள் இந்த அறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பெண் வக்கீல்கள் பயன்படுத்தி வந்த அறையை பூட்டி மாவட்ட நீதிபதி சீல் வைத்துள்ளார்.
நேற்று காலை வழக்கம் போல், பெண் வக்கீல்கள் சென்று பார்த்த போது, அறை பூட்டி சீல் வைப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால், தங்களுக்கு ஓய்வு எடுக்க அறைகள் இல்லாத நிலையில், நீதிமன்ற வளாக நுழைவு வாயில் பகுதியில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, தங்களுக்கு அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெண் வக்கீல்களை தரக்குறைவாக பேசும் மாவட்ட நீதிபதி குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்களையும் தெரிவித்தனர்.இது குறித்து பெண் வக்கீல்கள் கூறுகையில்,``புதிய நீதிமன்ற வளாகம் துவக்கப்பட்ட நாள் முதல் வக்கீல்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். பெண் வக்கீல்களுக்கு என்று அறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. நாங்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளை அணுகி தங்களுக்கு என ஒரு அறை பெற்றுக் கொண்டோம். அந்த அறையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தோம். மேலும், அந்த அறையில் இருந்தே பல வழக்குகளையும் நாங்கள் சந்தித்து வந்தோம். இந்நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) மாவட்ட நீதிபதி பூட்டி சீல் வைத்துள்ளார். இதனால், நாங்கள் ஓய்வு எடுக்கவும், வழக்குகள் சம்பந்தமாக விவாதிக்கவும் இடமின்றி, வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு மீண்டும் அறை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நீதிமன்றம் நடவடிக்ைக எடுக்க வேண்டும். இல்லையேனில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். மேலும், எங்களை தரக்குறைவாக பேசி வரும் மாவட்ட நீதிபதி குறித்தும் புகார் தெரிவிக்க உள்ளோம்’’ என்றனர்.
