ஆண்டிபட்டி, பிப். 24: ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள கழிப்பறைகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை எற்படுத்த கிராம ஊராட்சி பகுதிகளில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டது. பொதுசுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் கிராமபுற பெண்களின் தனித்துவம், பாதுகாப்பை உறுதி செய்வது இத்தகைய நோக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வளாகத்திலும் 10க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், 2 குளியலறைகள், மின் மோட்டாருடன் நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்க தேவையான கல் ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் வினியோகத்தினை வளாகத்தில் அமைக்கப்பட்டது. தண்ணீர் வினியோகம், வளாகத்திற்கு தேவையான மின்சார வசதி, பராமரிப்பு போன்றவை அந்தந்த கிராம ஊராட்சிகளின் மூலம் செய்யப்பட்டு வந்தது. இதில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை-மயிலை ஒன்றியம் உள்ளிட்ட இரண்டு ஒன்றியங்கள் அமைந்துள்ளது. இதில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளும், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 18 கிராம ஊராட்சி உள்ளது. இந்த கிராம ஊராட்சிகளில் மொத்தம் சுமார் 200க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிட வசதி, வீடுகளில் கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடத்தை ஆண்களும், பெண்களும் பயன்படுத்தி வந்தனர். இதனால் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. சுகாதாரகேடு ஏற்படும் நிலையும் இருந்தது. இதனால் அப்போது ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலைக்குண்டு ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த சுகாதார வளாகங்கள் எற்படுத்தப்பட்டதால் மக்கள் பலரும் திறந்தவெளி கழிப்பிடத்தை மறந்து சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வந்த சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இன்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. முதலில் சுகாதார வளாகத்திற்கு வரும் தண்ணீர் மோட்டார் பழுது ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காததால் மக்கள் பலரும் சுகாதார வளாகத்தை பயன்படுத்தவில்லை. சுகாதார வளாகத்தில் இருந்த குழாய்கள், கழிப்பறை கதவுகள், தண்ணீர் தொட்டிகள், சிமெண்ட் தண்ணீர் தொட்டிகள், தரைகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்து படிப்படியாக சேதமடைந்தது. தற்போது சுகாதார வளாகம் சுற்றிலும், செடிகள் அனைத்தும் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஜக்கம்மாள்பட்டி, தெப்பம்பட்டி, தர்மத்துப்பட்டி, ரெங்கசமுத்திரம், கதிர்நரசிங்கபுரம் உள்ளிடம் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது.
தற்போது இந்த சுகாதார வளாகங்கள் இல்லாததால் அப்பகுதி மக்கள் மீண்டும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி சுற்றியுள்ள கிராமபுற பகுதிகளில் வசிப்பவர்கள் விவசாம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். சமூகம் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு புதிய பழக்கவழக்கத்திற்கு மக்கள் மாறி வந்தாலும், இன்னும் பலரும் பழைய முறைப்படியை வாழ்ந்து வருகின்றனர்.
பலரும் அவர்களது சொந்த வீடுகளில் கழிப்பறை கட்டி பயன்படுத்தி வந்தாலும், இன்னும்கூட இங்கு பலரது வீடுகளில் கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இவர்கள் கிராமத்தில் உள்ள சுகாதார வளகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சுகாதார வளாகம் இல்லையென்றால் திறந்தவெளி பயன்படுத்துவதை தவிர இவர்களுக்கு வழிகள் ஏதும் இல்லை. ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் அதிகளவு மக்கள் வசித்து வருகின்றனர். இதில் சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மக்கள் வசித்து வருகின்றனர். நெருக்கமான குறுகிய இடங்களில் அதிகளவு மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் வசித்தாலும் பலரது வீட்டில் இங்கு கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. இவர்களுக்காக பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்தந்த தெருவில் கழிப்பறை வசதிகளை எற்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் ஒருசில இடங்களில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெண்கள் கழிப்பறை போதிய பராமரிப்பின்றி உள்ளது. தேனி-மதுரை சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த பெண்கள் கழிப்பறையை சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு விட்டால் அப்பகுதி மக்கள் பயன்படுத்துவதுடன், சாலையில் செல்லும் பாதசாரிகள் இதனை பயன்படுத்தி கொள்வார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த சுகாதார வளாகமும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சுகாதார வளாகங்களை ஊராட்சி நிர்வாகம் சீரமைத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அனைத்து சுகாதார வளாகங்களிலும் மின்மோட்டார் பழுது உள்ளது. இதனை சரிசெய்தாலே ஓரளவு சரியாகிவிடும். மின்மோட்டாரை சரிசெய்து அடுத்தடுத்து சுத்தம் செய்யும் பணி, உடைந்த பொருட்களை மாற்றும் பணி உள்ளிட்ட சிறிய பணிகள் மட்டும் தான் உள்ளது, எனவே மாவட்ட நிர்வாகம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள அளைத்து ஒருங்கிணைந்து மகளிர் சுகாதார வளாகத்தையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்’’ என்றனர்.
