கீழக்கரை, பிப்.24: ஏர்வாடியில் நடந்து வரும் மலேரியா, டெங்கு ஒழிப்பு பணிகளை தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் கொசுப்புழுக்களை தின்னும் கம்பூச்சியா என்ற ஒரு வகை மீன்களும் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் பொதுக்கிணறுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களால் விடப்படுகிறது.
இப்பணிகள் நடந்து வரும் சின்ன ஏர்வாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் இன்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். மேலும் ஏர்வாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ ஆய்வகங்கள், பிரசவ அறை, பிரசவ பின்கவனிப்பு அறை. உள்நோயாளிகள் வார்டுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, மருத்துவ பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் தரமான சிகிச்சை கிடைக்கிறதா எனவும் கேட்டறிந்தார்.
இயக்குனரின் இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அரவிந்த ராஜ், இளையராஜா, வினோத்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், விருதுநகர் மண்டல பூச்சியியல் அலுவலர் கல்விக்கரசன், இளநிலை பூச்சியியல் வவ்லுநர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், பகுதி சுகாதார செவிலியர் கலா, சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துரை, சுப்பிரமணியன், கோவிந்தகுமார், இஜாஜ் அகமது, ஹரி கிருஷ்ணா, மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் வளர்மதி, முனியராஜ், உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
