×

பள்ளி தலமரம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சோலை வனமாக மாறும் அரசு பள்ளிகள்  அழிவின் விளிம்பிலுள்ள தாவரங்களும் மீட்பு

 மதுரை, பிப்.24: தமிழக அளவில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதுமைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட மற்றும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட திட்டங்களை கண்டறிந்து அதனை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக மாணவ,மாணவியர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் புத்தக புழுக்களாக வளர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதி காட்டப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டுவதோடு, அதிகாரிகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக தமிழக பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற அறிவுப்பூர்வமாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலமாகவே, மாணவ,மாணவியர், கல்வியில் மட்டுமல்லாமல், விளையாட்டு, அறிவுக்கூர்மை, திறன் வளர்த்தல், பொது அறிவை மேம்படுத்துதல், திறன்பட கற்றல் மற்றும் கற்றல்படி நடத்தல் உள்ளிட்ட கொள்கைகள் இன்று பள்ளிக்கல்வியிலேயே மாணவ, மாணவியருக்கு கற்றுத்தரப்படுகிறது. தற்போது ஒரு புதிய திட்டமாக, மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் இயற்கையான அல்லது பசுமையான சூழலை ஏற்படுத்தும் திட்டம் தமிழக அளவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனதை அமைதி படுத்துவதில் இயற்கைக்கு நிகர் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, அரசு பள்ளிகளில், பசுமையான நிழல் மற்றும் காற்றோட்டத்தை ஏற்படுத்தும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்திருப்பதோடு, இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி அரசு பள்ளி வளாகத்தில் அதிகளவில் பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்து, பள்ளிகளை இயற்கை சூழலில் செயல்படச் செய்வதற்காக, `பள்ளி தலமரம்’ என்ற பெயரில் புதிய `மரம் வளர்ப்புத் திட்டம்’ துவக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், கிழக்கு ஒன்றியம், ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இத்திட்டம் துவக்கப்பட்டது. கலெக்டர் அனிஷ் சேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு `பள்ளித் தலமரம்’ திட்டத்தை துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, மதுரை கிரீன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், நன்கு நிழல் தரக்கூடிய மரங்கள், பழங்கள் தரும் மரங்கள், பறவைகளுக்கு உணவும், அடைக்கலமும் தரும் மரங்கள், மருத்துவ குணங்கள் நிறைந்த மரங்கள் உள்ளிட்ட மரங்கள், அந்தந்த பகுதி மண்ணின் தன்மைக்கேற்றவாறு தேர்வு செய்யப்பட்டு நட்டு வைத்து வளர்க்கப்படும்.

இதுதவிர தமிழ்நாட்டில் தோராயமாக 5 ஆயிரம் இயல் தாவரங்கள் உள்ளன. அவற்றில் பல தாவரங்கள் நமது அறியாமையின் காரணமாகவும், ஆர்வமின்மை காரணமாகவும் இன்று அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. அதுபோன்ற எண்ணற்ற தாவரங்களை கண்டறிந்து, அதனை மீட்டு, அந்த அரிய வகை தாவரங்களை மீண்டும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, இதுபோன்ற அழிந்துவரும் தாவரங்கள் குறித்த தகவல்களை சேகரித்து, மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது, இந்த `பள்ளி தலமரம்’ திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். மதுரை மாவட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலமரம் திட்டத்தை செயல்படுத்த, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு, தீவிரம் காட்டி வருகிறது.

Tags :
× RELATED கார் மோதி 3 பேர் காயம்