×

பள்ளிப்பட்டில் கோடைக்கு முன்பே களைகட்டிய தர்பூசணி விற்பனை

பள்ளிப்பட்டு, பிப். 24: பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையோரம் கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை களைகட்டியுள்ளது. இப்பழங்களை ஆந்திர விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து ஆர்.கே.பேட்டை, சோளிங்கர், பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையோரம் கோடை காலத்தில் பழங்கள் விற்பனை செய்வதில் வியாபாரிகள் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு கோடைவெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு பகுதிகளில் பழ வியாபாரிகள் தர்பூசணி பழங்களை குவித்துவைத்து கிலோ கணக்கிலும், பீஸ் கணக்கிலும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி தர்பூசணி பழங்களை சுவைத்துச் செல்கின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆந்திர விவசாயிகளிடமிருந்து ஒரு டன் தற்பூசணியை ₹10 ஆயிரம் முதல் ₹12 ஆயிரம் வரை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அவைகளை லாரிகளில் எடுத்து வந்து சாலையோரங்களில் குவித்துவைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில்லறையில் கிலோ ₹20க்கும்,   பீஸ் ஒன்று ₹10க்கும் விற்பனை செய்வதாக அத்திமாஞ்சேரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தர்ப்பூணி வியாபாரி ஒருவர் தெரிவித்தார். ஆந்திராவில் சாகுபடி செய்யும் தர்பூசணி பழங்கள் மண்வளம் காரணமாக சுவைமிக்கவையாக  இருப்பதால்,  இவற்றை ருசிக்க சிறுவர்கள் முதல் முதியவர் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags : Pallipat ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை