×

மழையிலும், வெயிலிலும் பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்திருப்பு எட்டயபுரம் பைபாசில் பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா? பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு

எட்டயபுரம், பிப். 23: எட்டயபுரத்தில் இருந்து மதுரை மார்க்கமாக வெளியூர் செல்லும் பயணிகள், தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலை சந்திப்பில் மழை மற்றும் வெயிலில் மணிக்கணக்கில் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே புறவழிச்சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டயபுரத்தில் இருந்து மதுரை, சென்னை, கோயமுத்தூர், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்று திரும்புகின்றனர்.

புறவழிச்சாலை தொடங்கப்படுவதற்கு முன்பும், தொடங்கிய சில ஆண்டுகள் வரையிலும் பெருநகரங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் எட்டயபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றன. கடந்த சில ஆண்டுகளாக பைபாஸ் ரைடர் என்ற பெயரில் பேருந்துகள் இயங்க தொடங்கிய நாள் முதல் எந்த பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்வதில்லை. ஆரம்பத்தில் கோயமுத்தூர், சேலம், திருச்சி மண்டல அரசு பேருந்துகள் ஊருக்குள் வராமல் பைபாசில் சென்றது. திருநெல்வேலி, மதுரை மண்டல அரசு பேருந்துகள் ஊருக்குள் வந்து சென்றன. நாளடைவில் மதுரை மண்டல பேருந்துகளும், அதனை தொடர்ந்து திருநெல்வேலி மண்டல அரசு பேருந்துகளும் ஊருக்குள் வருவதை தவிர்த்து பைபாசில் செல்ல தொடங்கின. இதனால் மதுரை மார்க்கமாக வெளியூர் செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து தினகரனில் அவ்வப்போது செய்திகள் வெளியாகும்போது மட்டும் ஓரிரு நாட்கள், பெருநகர பேருந்துகள் ஊருக்குள் வருவதும், பின்னர் வழக்கம்போல் புறவழிச்சாலையில் பயணிப்பதும் தொடர் கதையாகி விட்டது. இதனிடையே எட்டயபுரம் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று மார்க்கண்டேயன் எம்எல்ஏ மேற்கொண்ட நடவடிக்கையால் சில பேருந்துகள் எட்டயபுரம் பஸ் நிலையத்திற்குள் வந்து சென்றன. இந்த பேருந்துகளும் சில நேரங்களில் வராது என்ற நிலையில் பயணிகள் அனைவரும் தற்போது பைபாசுக்கே பஸ் ஏற சென்று விடுகின்றனர்.

ஆனாலும் பைபாசில் நிழற்குடை அமைக்கப்படாததால் மழையிலும், வெயிலிலும் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கைக்குழந்தைகளுடன் தாய்மார்களும், சிறுவர்கள், முதியவர்கள் என முடியாதவர்களும் பைபாசில் கையை குடையாக வைத்து காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. இரவு நேரங்களிலும் இதே நிலைதான். பெண்கள், முதியவர்கள், கல்லூரி மாணவிகள் என யாராக இருந்தாலும் எந்த பாதுகாப்பும் இல்லாத பைபாஸ் சாலையில் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் பாதுகாப்பும் கேள்விகுறியாகி உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், அனைத்து பேருந்துகளும் எட்டயபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் அல்லது இரவு நேரத்திலாவது மதுரை மார்க்கத்தில் இருந்து தூத்துக்குடி மார்க்கமாக செல்லும் பேருந்துகளை ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் புறவழிச்சாலையில் காத்திருக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அங்கு இருக்கையுடன் கூடிய நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும் புறவழிச்சாலையில் இருந்து ஊருக்குள் வரும் பாதையில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும், என்றார். இதே கோரிக்கைகளை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் மக்கள்
மதுரை - தூத்துக்குடி புறவழிச்சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. ஆம்னி பேருந்துகள், லாரிகள், கார்கள் என வரிசையாக வந்த வண்ணம் இருக்கும். அரசு பேருந்து வருகிறதா- என இமைகொட்டாமல் சாலையையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. பயணிகள் பேருந்தை பார்த்து கைகாட்டினால் தான் பேருந்து நிற்கும். எனவே பயணிகள் வழிமேல் விழிவைத்து காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் கண் கூசும் வெளிச்சத்தில் வாகனங்கள் வரிசைக்கட்டி செல்வதால் எந்த வாகனம் வருகிறது என தெரிவதில்லை. டிரைவர்களாக பார்த்து நின்றால்தான் உண்டு. அதேபோல் எட்டயபுரம் பைபாசில் பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் சாலை ஓரமாக ஒதுங்கி நிற்க இடமில்லை. வந்த வேகத்தில் சாலையிலேயே நின்றுகொண்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்ல வசதியாகவும், பயணிகள் பாதுகாப்பாக காத்திருக்க வசதியாக சாலை ஓரமாக இடம் ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags : Ettayapuram Bypass ,
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்