×

மார்ச் 2வது வாரத்தில் கண்மாய், குளங்களில் வண்டல் மண் இலவசமாக அள்ளிக் கொள்ளலாம் உத்தமபாளையம் குறைதீர் முகாமில் கலெக்டர் தகவல்

சின்னமனூர், பிப். 23: உத்தமபாளையம் தாலுகாவில் மார்ச் 2வது வாரத்திலிருந்து கண்மாய், குளங்களில் வண்டல் மண் இலவசமாக அள்ளிக்கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இந்த முகாமிற்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ பால்பாண்டி முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். ஒவ்வொரு துறை அதிகாரிகளும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அரசு திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் சஜிவனா பேசுகையில், ‘‘பொதுமக்கள் எந்த குறைகளுக்கும் உடனடியாக மாவட்டம் நிர்வாகம் வருவதற்கு முன்பாகவே உங்கள் பகுதியில் உள்ள சம்மந்தபட்ட அதிகாரியிடம் கொடுத்து பிரச்னைகளை கட்டாயமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். உத்தமபாளையம் தாலுகாவில் காளவாசல் நடத்துபவர்கள், விவசாய சாகுபடிகளுக்கு நிலங்களுக்குத் தேவையான வண்டல் மண் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று மார்ச் முதல் தேதியில் இருந்து மனுக்கள் பெறப்பட்டு மார்ச் மாதம் 2வது வாரத்திலிருந்து கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண் இலவசமாக அள்ளிக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

வரும் மார்ச் 3ம் தேதியிலிருந்து மார்ச் 12ம் தேதி வரை தேனியில் புத்தகத் திருவிழா நடத்தப்பட இருக்கிறது. புத்தகத்திருவிழாவின் மூலமாக மாணவ, மாணவிகள் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாசிப்பு திறனை அதிகப்படுத்த வேண்டும்’’ என்றார். ஏற்கனவே 218 மனுக்கள் பெறப்பட்டு அதில் 130 பேர்களுக்கு 12 லட்சத்தி 42,000க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தொடர்ந்து 30 பேர்களுக்கு மனை பட்டா வழங்குதல், முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு 30 பேர்களுக்கு உதவித் தொகையும், 20 பேர்களுக்கு பட்டா மாறுதலும், ஐந்து பேர்களுக்கு தையல் மெஷின்களும், ஐந்து பேர்களுக்கு தேய்ப்பு பெட்டியும், 12 பேர்களுக்கு ஸ்மார்ட் கார்டு என்ற குடும்ப அட்டைகளும் கர்ப்பிணி பெண்களுக்கு பல வகை கொண்ட உணவு மற்றும் மருத்துவ பெட்டகமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த முகாமில் மட்டும் 460 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அந்த மனுக்களை பிரித்து சம்மந்தபட்ட துறைவாரியாக அனுப்பி ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தர விட்டார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை உத்தமபாளையம் தாசில்தார் அலுவலக வருவாய்த்துறையினர் செய்திருந்தனர்.

Tags : Kanmai ,Uthampalayam Kuratheer ,
× RELATED சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில்...