×

கம்பம் மெயின்ரோட்டில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

கம்பம், பிப். 23: கம்பம் மெயின்ரோட்டில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கம்பம் நகராட்சி பகுதியான கேகே பட்டி சாலை பிரிவில் இருந்து ஐசக்போதகர் தெரு பிரிவு வரை உள்ள எல்.எப் மெயின் ரோட்டில் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நகராட்சி 13 வது வார்டு நாட்டாண்மை சுருளி தெரு வழியாக சென்று கொண்டிருந்தது. தற்போது இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் எல்.எப் மெயின் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை எல்.எப். மெயின் ரோடு வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ பால்பாண்டி ஆலோசனை நடத்தினார். அதில் கே.கே பட்டி சாலை பிரிவு முதல் ஐசக் போதகர் தெரு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமணன் தலைமையில் உதவிப்பொறியாளர் வைரக்குமார், நகராட்சி கட்டிட ஆய்வாளர் சலீம் ஆகியோர் முன்னிலையில் கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், தற்போது சாக்கடை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், மேற்கூரைகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. சாக்கடை கால்வாய் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

Tags : Kampum Main Road ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை