×

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் மாணவர்கள் அட்டகாசம்: பயணிகள் அச்சம்

கூடுவாஞ்சேரி, பிப். 22: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் ₹2 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு உயர் நீதிமன்றம், கோயம்பேடு, பிராட்வே, ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 70க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்த பேருந்து நிலையத்தால் நந்திவரத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்று வரும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தில் 3 மணி நேரமாக சுற்றித்திரியும் மாணவர்கள், வீட்டுக்குச் செல்லாமல் பஸ்களில் மாறி மாறி ஏறி உட்காருவதால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘காலை நேரத்தில் வழக்கம்போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். இதில், 4.30 மணியளவில் பேருந்து நிலையத்துக்கு வரும் மாணவ, மாணவிகள் பேருந்துகளில் ஏறி உட்காருகின்றனர். பேருந்துகள் புறப்பட தயாராகும்போது உடனே கீழே இறங்கி மற்றொரு பேருந்தில் உட்காருகின்றனர். இதுபோன்று, இரவு 7.30 மணி வரை அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் தினந்தோறும் அட்டகாசம் செய்தபடி சுற்றித் திரிகின்றனர். அது மட்டுமல்லாமல் முன்னாள் மாணவர்கள் பேருந்து நிலையத்துக்குள் பைக் ரேசிங் செய்கின்றனர். சிலர் மாணவிகளை கிண்டல் செய்வதுடன், அடிதடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தட்டி கேட்பவர்களை கொலை மிரட்டல் விடுத்துவிட்டு செல்கின்றனர். இதனால், காவல்துறையில் புகார் கொடுக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் மாறு வேடத்தில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பேருந்து நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Gootuwancheri ,Atakasam ,
× RELATED மாந்தோப்பில் 5 யானைகள் அட்டகாசம் பேரணாம்பட்டு அருகே