திருப்பூர், பிப். 22: திருப்பூரில், மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவியை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் நேரில் வழங்கினார். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஒருவர் காது கேட்காமல் பல ஆண்டுகளாக சிரமத்தை சந்தித்து வந்தார். இதனால் தனக்கு காது கேட்கும் கருவி வாங்க உதவ வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு அவரை அழைத்த துணை மேயர் பாலசுப்பிரமணியம், அந்த நபருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் காது கேட்கும் கருவியை வழங்கினார்.
இதுபோல சூசையாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் சர்க்கரை நோயால் அவதிப்படுவதாகவும், சிகிச்சை அளிக்க உதவும்படியும் துணை மேயரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த பெண்ணையும் வரவழைத்த துணை மேயர் பாலசுப்பிரமணியம், அவருக்கு 5 ஆயிரம் ரூபாயை வழங்கி மனித நேயத்துடன் உதவி செய்தார். இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிக்கு காது கேட்கும் கருவியையும், பெண் நோயாளிக்கு சிகிச்சைக்கு பண உதவியும் வழங்கிய மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிரமணியத்தின் மனிதாபிமானம் மிக்க செயல் பொதுமக்கள் இடையே பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

