போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.100 கோடியில் சமயநல்லூர் முதல் காமராஜர் பாலம் வரை புதிய சாலை முதல்கட்ட ஆய்வு பணி துவக்கம்

மதுரை: மதுரை சமயநல்லூர் நான்கு வழிச்சாலை முதல் காமராஜர் பாலம் வரை ரூ.100 கோடியில் வைகை ஆற்றின் வடகரையில் புதிய சாலை அமைக்க முதல்கட்ட ஆய்வு பணி துவங்கியது. மதுரை மாநகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. அப்போது, மாநகரில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய முடியாத சூழ்நிலை. மதுரை தென்பகுதியில் இருந்து வைகை ஆற்றை கடந்த வடபகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், ஏவிபாலம், குருவிக்காரன் சாலை பெத்தானியாபுரம் பாலம் மற்றும் யானைக்கல் கீழ்பாலம் ஆகியவை மட்டுமே இருந்தது. இதனால், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, எறும்பு ஊர்ந்து செல்வது போல், வாகனம் ஊர்ந்து செல்லும், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு, நெரிசலில் இருந்து வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டும் எனக் கருதி, கடந்த 1996ல் திமுக ஆட்சியின் போது, மதுரை வைகை ஆற்றின் வடபகுதி, தென்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலை போடும் பணி துவக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இரண்டு பகுதி மக்கள் எளிதாக ஆற்றை கடந்து செல்லும் வகையில், ஆற்றின் குறுக்கே, ஒபுளாபடித்துரை, ஆரப்பாளையம், மணிநகரம், யானைக்கல் ஆகிய பகுதியில் தரைப்பாலம், மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, வைகை ஆற்றின் இருகரையோரம் உள்ள சாலையை பயன்படுத்த முடியாதபடி தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்தது. கடந்த 2017 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தரைப்பாலம் உயர்மட்ட பாலமாகவும், வைகை ஆற்றின் இரண்டு கரையை அகலப்படுத்தி, ஆற்றின் தென் பகுதியில், பெத்தானியாபுரம் காமராஜர் பாலம் முதல், விரகனூர் ரிங் ரோடு வரையிலும், வடபகுதியில் வண்டியூர் ரிங்ரோடு முதல் காமராஜர் பாலம் வரை சுமார் ரூ.900 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு தற்போது ஒரு சில பகுதியை தவிர மற்ற பகுதியில் ஆற்றுக்கரை சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நகரில் போக்குவரத்து சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், ஆற்றின் இருபுற சாலை மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக ஆற்றின் வடபகுதியில், காமராஜர் பாலம் முதல் சமயநல்லூர் நான்கு வழிச்சாலை வரை புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.100 கோடி செலவில் வைகை ஆற்றின் வடகரை சாலை அமைக்கப்பட உள்ளது. புதிய சாலை அமைப்பது தொடர்பாக நிலம் எடுப்பது குறித்து, முதல்கட்ட கள ஆய்வு பணி நடந்தது. சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மற்றும் உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் இந்த கள ஆய்வில், நிலஎடுப்பு தாசில்தார் தமிழ்செல்வி, உதவிப்பொறியாளர் சதீஷ்அஜய், துணை ஆய்வாளர் சபரிதரன், சார் ஆய்வாளர்கள் கோமலா, திவ்யா, சாலை ஆய்வாளர் மூர்த்தி, பால்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைவில் சாலைக்கு தேவையான நிலம் கையகப்படுத்தி, சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

Related Stories: