திண்டுக்கல்: கொல்கத்தாவில் நேஷனல் மாஸ்டர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப்.14 முதல் பிப்.18 வரை நடைபெற்றது. இதில் கொல்கத்தா, டெல்லி, அசாம், ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 80 வீரர்கள் பங்கேற்றனர். தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல் மரியனாதபுரத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் கோலூன்றி தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட அலெக்சாண்டர் என்ற அலெக்ஸ் என்பவர் 2 மீட்டர் 80 சென்டி மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்.
ஞானபாலன் என்பவர் 2 மீட்டர் 40 சென்டி மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற முனீஸ்வரன் 43 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை வென்றார். நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்டாலின் 5 மீட்டர் 44 சென்டி மீட்டர் தூரம் தாண்டி 6வது இடத்தை பிடித்தார். திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த இவர்கள் ஆசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலோ அல்லது புவனேஸ்வரத்திலோ ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வந்த வீரர்களுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் சார்பில் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் பிரேம்குமார், நகர தலைவர் அஜீத், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் முகேஷ், மாவட்ட துணை செயலாளர் தமிழ் செல்வன், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகி ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
