×

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இசைப்பாடல்கள் சிறப்பு சொற்பொழிவு

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் சுப்பிரமணியம் அறக்கட்டளை சார்பில் பனுவல் அரங்கத்தில் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலக்கியத்துறைத் தலைவரும் கலைப்புல முதன்மையருமான பேராசிரியர் இளையாப்பிள்ளை வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந திருவள்ளுவன் தலைமை வகித்து பேசினார். பதிவாளர் தியாகராஜன் வாழ்த்தி பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான குமார் தமிழ் இசைப்பாடல்கள் எனும் தலைப்பில் பேசியதாவது. நான் பல்வேறு குருமார்களிடம் இசை கற்றவன் என்றாலும், டைகர் வரதாச்சாரியின் வளர்ப்பு என்பதில் பெருமை அடைகிறேன். டைகர் வரதாச்சாரியை இசை உலகில் அனைவரும் அறிவர். அந்த டைகர் வரதாச்சாரி என்பவரே எனது இசை குரு. இசைத்துறையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவர் ஆகியோர் தமிழிசைக்கான அடையாளங்களைப் புலப்படுத்தியவர்கள் பின்வந்த தியாகராசர், சியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய இசைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மும்மூர்த்திகள் ஆவர்.

இவர்களின் பாடல்கள் இன்றைய திரையிசைப் பாடல்களோடு ஒப்பு நோக்கத்தக்கவை. இசை மும்மூர்த்திகள் பயன்படுத்திய இசைக் கூறுகளை, மிகவும் சிறப்பாகத் தமிழ் உலகிற்கு எடுத்தியம்பிய பெருமை இசைஞானி இளையராஜாவை சாரும் என்றார். இலக்கியத்துறை இணைப்பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர் செந்தில்முருகன் தொகுத்து வழங்கினார். இதில், இலக்கியத்துறையின் உதவிப்பேராசிரியர் தனலெட்சுமி மற்றும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவர் முனைவர் குறிஞ்சிவேந்தன், இசைத்துறைத் தலைவர் மாதவி, நாட்டுப்புறவியல் துறையின் உதவிப்பேராசிரியர் சீமான்.இளையராஜா, மொழியியல் துறையின் உதவிப்பேராசிரியர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur Tamil University ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை