புதுக்கோட்டை: புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்து மாணவர்களை வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022 -2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின் கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவ மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாத நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி 2022-2023ம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட அளவில் நடைபெறும் சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் வானவில் மன்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பினையும் பெறுவார்கள். அந்த முறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி பிப்ரவரி மாதத்திற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டி புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்து மாணவர்களை வாழ்த்தி பேசினார். இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் பள்ளி, வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட 2 மாணவர்கள், 2 மாணவிகள் வீதம் 4 மாணவர்கள் வீதம் 13 ஒன்றியங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இலக்கிய மன்ற போட்டியானது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, கல்வியும், கல்லாமையும் ஆகிய கருப்பொருட்களை உள்ளடக்கியிருந்தது.
மேற்கண்ட கருப்பொருட்களை உள்ளடக்கி கட்டுரை போட்டியானது கட்டுரை எழுதுதல், ஏற்கனவே தயாரித்து எழுதுவது, கதையை முழுமை படுத்துதல், போட்டி நடைபெறும் நேரத்தில் தானிக எழுதுவது, பேச்சுத் திறமை அளிக்கப்பட்ட தலைப்பில், போட்டி நடைபெற்ற நேரத்தில் வழங்கப்பட்ட தலைப்பிலும் பேசினார்கள். நடுவர்களாக பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் திருப்பதி,எழுத்தாளர்களான ராஜமாணிக்கம், மைதிலி, ஆகியோர் செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியினை ஆசிரியர்கள் முத்துக்கருப்பன், வள்ளியப்பன், மகாசுந்தர், பாண்டி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இப்போட்டியில் கிழாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர் ராமநாதன், கழனிவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி நந்தினி ஆகியோர்மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டி பொறுப்பு அலுவலராக முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி செயல்பட்டார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரன், புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் மாரிமுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை. செந்தில், இல்லம் தேடிக்கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
