×

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மக்களின் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்களின் மனுக்கள் மீது கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயசிங் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2, நகராட்சி நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், பேரூராட்சி நமக்கு நாமே திட்டம், நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பணிகள், பட்டா கோரி நிலுவையில் உள்ள மனுக்கள், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி உட்கட்டமைப்பு பணிகள், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் முகவரி மனுக்கள், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையினர் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும். தொடர்ந்து கள ஆய்வு செய்து எதாவது தொய்வு இருப்பின் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்றார். முன்னதாக தமிழ்நாடு நகர்புற வாழ்விட வாழ்வதார மேம்பாட்டு வாரியம், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்காக தலா ₹1 லட்சம் வீதம் 32 பயனாளிகளுக்கு ₹32 லட்சத்திற்கான வங்கிக் கடன் உதவிக்கான காசோலைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், இணை இயக்குநர் மருத்துவபணிகள் ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட நுகர்வோர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கலையரசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : District Supervision Officer ,
× RELATED அயன்கரிசல்குளத்தில் 88 ஹெக்டேரில்...