×

முத்துநாயக்கன்பட்டியை தலைமையிடமாக கொண்டு ஒன்றியம் அமைக்க வேண்டும்

ஓமலூர், பிப்.21: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் கோட்டகவுண்டம்பட்டி, சாமிநாயக்கன்பட்டி, மாங்குப்பை, முத்துநாயக்கம்பட்டி, பாகல்பட்டி, செம்மண்கூடல், நல்லாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, தாரமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கருக்கல்வாடி, அழகுசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து, முத்துநாயக்கன்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்களின் அலுவல் தேவைக்காக ஓமலூர் வரை செல்வதால் ஏற்படும் அலைச்சல் குறையும். பாகல்பட்டி ஊராட்சிக்கும் ஓமலூருக்கும் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதுபோன்ற சிரமங்களை தவிர்த்திட, அரசுத்துறை சம்பந்தமான சேவைகள் பொதுமக்களுக்கு விரைந்து கிடைத்திட, தனி ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டியில் இருந்து முத்தநாயக்கன்பட்டி சாலையில் இணையும் கிராம சாலையை அகலப்படுத்த வேண்டும். அழகுசமுத்திரம் ஊராட்சியில் இருந்து சேவகனூர் வழியாக முத்துநாயக்கன்பட்டி செல்லும் சாலையை விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டும். சேலம் புதுரோட்டில் இருந்து முத்துநாயக்கன்பட்டி வழியாக ஓமலூர் வரை இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வரிடம் அளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, பாமக எம்எல்ஏ சதாசிவம் உடனிருந்தார்.

Tags : Muthunayakanpatti ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்